
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.
ரதவீதிகள் வழியாக திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் நேற்று அதிகாலை 4.40 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.