
பங்குனி உத்திரமான நேற்று காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னார் கீழ ரதவீதியில் செப்புத்தேரில் எழுந்தருளினர். பின்னர் செப்புத்தேரோட்டம் நடந்தது. ரத வீதிகள் வழியாக பக்தர்கள் “கோவிந்தா, கோபாலா...” என கோஷமிட்டு செப்பு தேரை இழுத்து வந்தனர்.
மாலை 4 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.