
2-ம் பிரகாரத்தில் வலம் வர பக்தர்களிடம் இருந்து ரூ.250, ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இலவச தரிசனத்திற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மூலவரை தரிசனம் செய்தபின்னர் பக்தர்கள் 3-ம் பிரகாரம் வழியாக வெளியே வந்தனர். இதனால், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இந்தநிலையில் 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வருவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதற்கிடையே கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெங்கநாதர் சன்னதியில் நடைமுறையில் இருந்த விரைவு வழி கட்டணம் ரூ. 250 மற்றும் சிறப்பு வழி கட்டணம் ரூ.50 ஆகியவை ரத்து செய்யப்பட்டு ஒரே கட்டண தரிசனமாக ரூ.100 என மாற்றப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதன்காரணமாக 2-ம் பிரகாரத்தில் விரைவு வழி தரிசனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து நேற்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.