
இதனையடுத்து இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணியசாமி- வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காலையில் வேடர்பரி உற்சவம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவில் வளாகத்தில் உள்ள 16 கால் திருமண மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுப்பிரமணியர்- வள்ளியம்மை அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை வேத மந்திரங்கள் முழங்க, வள்ளிமலை கோவில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வள்ளிமலை முருகனுக்கு அரோகரா' என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து சாமிக்கு மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு மொய் எழுதினார்கள். மொத்தம் ரூ.2,29,120 பக்தர்கள் மொய் எழுதியாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மாதவன், மேலாளர் நித்யானந்தம் உள்ளிட்ட அறநிலையத்துறை அலுவலர்களும், உபயதாரர்களும், பக்தர்களும் கலந்துகொண்டனர். இரவு பிணக்கு தீர்க்கும் உற்சவம் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) 108 சங்காபிஷேக நடைபெறுகிறது.