search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வேடுபறி உற்சவம்
    X
    நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வேடுபறி உற்சவம்

    காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வேடுபறி உற்சவம்

    காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நடைபெறும் இராப்பத்து நிகழ்ச்சியில் 8-ம் நாளான நேற்று திருவாபரணங்கள் சாற்றப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது.
    விஷ்ணு பக்தரான திருமங்கை மன்னன், வைணவப்பெண் குமுதவல்லியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அப்போது தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் திருமணத்துக்கு ஒப்புக் கொள்வதாக குமுதவல்லி நிபந்தனை விதித்தார்.

    அதை ஏற்று திருமங்கை மன்னனும் அன்னதானம் செய்தார். தொடர்ந்து தினமும் செய்ய இயலாத நிலையில், அதிகமான பொருள் உள்ளவர்களிடம் கொள்ளையடித்து அன்னதானம் செய்து வந்தார்.

    அவரை திருத்த நினைத்த பெருமாள், தம்பதியராக அதிக ஆபரணங்களை அணிந்து திருமணக்கோலத்தில் சென்றுள்ளார். பெருமாள் என்பது தெரியாமல், திருமங்கை மன்னரின் கூட்டத்தினர், தம்பதியை இடைமறித்து நகைகளை பறித்தனர்.

    கடைசியில் பெருமாளின் காலில் இருந்த மெட்டியை அகற்ற முடியாத போது, தனது வாயால் கடித்து இழுக்க திருமங்கை மன்னன் முயன்ற போது, அவரின் சிரம் (தலை) பெருமாளின் திருவடியில் பட்டது. அப்போது அவருக்குத் ஞானத்தெளிவு கிடைத்ததாக புராணம் கூறுகிறது.

    இதை விளக்கும் வகையில், ஆண்டுதோறும் வைணவ தலங்களில் இராப்பத்து நிகழ்ச்சியின்போது நடத்தப்படுவதே வேடுபறி உற்சவம். அந்த வகையில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நடைபெறும் இராப்பத்து நிகழ்ச்சியில் 8-ம் நாளான நேற்று திருவாபரணங்கள் சாற்றப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது. திருமங்கை மன்னன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து பாரதியார் சாலையில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. திருமங்கை மன்னனுக்கு ஞானத்தெளிவு கிடைக்கும் வகையில் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.

    கோவில் முதல் தீர்த்தக்காரர் அரங்கநாதாச்சாரியார் சாமிகள் தலைமையில் பாசுரம் படிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
    Next Story
    ×