search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையை பக்தர்கள் தரிசனம் செய்த போது எடுத்த படம்.
    X
    மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையை பக்தர்கள் தரிசனம் செய்த போது எடுத்த படம்.

    வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம்

    வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-வது ஆண்டு தைப்பூச திருவிழாவில் ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி வடலூர் சத்தியஞானசபையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பல்லாக்கை கருங்குழி கிராமத்தை சேர்ந்த மீனவ சமூகத்தினர்கள் தங்களது தோளில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    மேட்டுக்குப்பத்துக்கு செல்லும் வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும், செங்கால் ஓடையில் நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களும், அதை தொடர்ந்து கருங்குழி கிராமத்தினரும் பூக்கள் பழங்கள் உடன் வரவேற்றனர்.

    கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருவறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டுசெல்லப்பட்டது, அங்கு கிராம மக்கள் சார்பில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

    பின்னர் வள்ளலார் சித்திபெற்ற திருஅறையினுள் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. மதியம் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதா க பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாகி அதிகாரி ராஜா சரவணகுமார் மற்றும் மேட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×