search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் தீ மிதித்த தலைமை பூசாரி ராமுவை படத்தில் காணலாம்.
    X
    பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் தீ மிதித்த தலைமை பூசாரி ராமுவை படத்தில் காணலாம்.

    பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா

    பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்க தடை விதிக்கப்பட்டது.
    கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குண்டம் விழா கடந்த 30-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

    விழாவையொட்டி 50 அடி நீளம் உள்ள குண்டம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் குண்டத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு குண்டம் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6.45 மணி அளவில் நந்தா தீபம் ஏற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குண்டத்துக்கு கோவிலின் தலைமை பூசாரி ராமு என்கிற ராமானுஜம் சிறப்பு பூஜை செய்தார். இதையடுத்து குண்டத்தில் உள்ள தீ தனல்களை எடுத்து மேலே வீசினார். பின்னர் அவர் முதன் முதலாக குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து கோவிலின் 15 பூசாரிகளும், வீரமக்கள் எனப்படும் குண்டம் தயார் செய்த 50 பேரும் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

    இதையடுத்து குண்டம் மூடப்பட்டு பக்தர்கள் வரிசையாக நின்று அம்மனை வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் திரளான பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்று வரிசையாக குண்டம் இறங்குவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் நேற்று குண்டம் இறங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் தேரோட்டம் மற்றும் மலர் பல்லக்கு நிகழ்ச்சிகளையும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. அதுமட்டுமின்றி கோவிலில் கடை வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×