search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து ஆடியபடி வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து ஆடியபடி வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    கோவில்கள் அடைப்பு: பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் அதிர்ச்சி

    ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பாத யாத்திரை வரும் பக்தர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் முதன்மையான திருவிழா தைப்பூச விழாவாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகப்பெருமானுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபடுவார்கள்.

    கடந்த 2 வருடமாக கொரோனா பரவல் காரணத்தால் பக்தர்கள் இன்றியும், கட்டுப்பாடுகளுடனும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தின் போது உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த வருடம் தைப்பூசத்திருவிழா வருகிற 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 18-ந் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.

    சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து சாரைசாரையாக பக்தர்கள் வருகின்றனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சத்திரங்களில் தங்கி விட்டு பின்னர் மீண்டும் பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன.

    தற்போது கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேர ஊரடங்கால் அவர்கள் எங்கும் தங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பாத யாத்திரை வரும் பக்தர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து கோவில்கள் அடைக்கப்படும் என்பதை அறிந்தவுடன் நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள் இடையிலேயே பஸ்சில் ஏறி பழனிக்கு வந்தனர். அவர்கள் கோவிலில் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் பஸ் இருக்காது என்பதால் உடனே தங்கள் ஊருக்கு திரும்பினர். இதனால் பழனி கோவிலில் நேற்று இரவு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல கூட்டம் அலைமோதியது. அவர்கள் ஊருக்கு செல்ல கூடுதல் பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் பல ஊர்களில் இருந்து வந்தவர்கள் இன்னும் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் ஊரடங்கு தடை காலத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

    சிவகங்கையைச் சேர்ந்த சங்கர் என்பவர் தெரிவிக்கையில், நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதயாத்திரையாக பழனிக்கு நண்பர்களுடன் வந்தேன். இன்று முதல் கோவில் அடைக்கப்படும் என்பதால் பஸ்சில் ஏறி பழனிக்கு வந்து விட்டேன். ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அன்றைய தினம் கடைகள் இருக்காது என்பதாலும், கோவில் திறந்திருக்காது என்பதாலும் பஸ்சில் ஏறி வந்து விட்டோம். இதனால் பாதயாத்திரையாக வந்து பழனிக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறாமல் போய் விட்டதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

    இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும். குறிப்பாக காரைக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் காவடி எடுத்து வந்து பழனி முருகனை தரிசிப்பது வழக்கம்.

    கடந்த 2 வருடமாக தைப்பூச திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இந்த வருடமாவது சற்று தளர்வுகள் அறிவித்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

    தேனியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தெரிவிக்கையில், நாங்கள் வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது குடும்பத்துடன் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வோம். ஆனால் இந்த வருடம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் முன்கூட்டியே கோவில் திறந்திருக்கும் நாளில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்து வந்து விட்டோம். பாதயாத்திரையாக வர இயலாமல் பஸ்சில் ஏறி ஏராளமான பக்தர்கள் பழனியில் கூடி விட்டனர். சாதாரண நாட்களில் வருபவர்களை விட ஒரே நாளில் அதிக பக்தர்கள் கூடியதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக உள்ளது. இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க வழக்கமான கட்டுப்பாடுகளுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×