search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கற்குவேல் அய்யனார் கோவில்
    X
    கற்குவேல் அய்யனார் கோவில்

    கள்ளர்வெட்டு திருவிழா: 16,17-ந்தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    கற்குவேல் அய்யனார் கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் சேனல்கள் யூடியூப் மூலமாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் 3 நாள் கோவிலில் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, புனிதமண் எடுத்துச் செல்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா விழிப்புணர்வு காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் 17-ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    விழா தொடங்கியதை யொட்டி தினசரி மாலையில் வில்லிசையும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. விழாவில் 28-ம் நாளான வருகிற 14-ந்தேதி பகல் 11மணிக்கு ஐவராஜா பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.

    29 -ம் நாளான 15-ந் தேதி காலை 11 மணிக்கும், நண்பகல் 12 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு உற்சவர் வீதி உலாவும் நடக்கிறது. இந்த இரு நாட்கள் மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் தினசரி 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 30-ம் நாளான 16-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு கோவிலுக்கு பின்புறமுள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் வந்து தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.கள்ளர் வெட்டுநடந்த இடத்தில் புனித மண் எடுத்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள்.

    இந்த ஆண்டு 16-ந்தேதி மற்றும் 17-ந்தேதி ஆகிய இரு நாட்களும் பக்தர்களுக்கு முழு நேரமும் அனுமதி இல்லை, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது, கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் சேனல்கள் யூடியூப் மூலமாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில்செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜீத், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×