search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஞான விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
    X
    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஞான விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

    மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் ஞான விநாயகர், ஆகாச அய்யனார் கோவில்களில் குடமுழுக்கு

    மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் பகுதியில் உள்ள ஞானவிநாயகர், ஆகாச அய்யனார் கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில் ஞானவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது. அன்று முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில் மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து ஆலய விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேதவிற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க குடமுழுக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குத்தாலம் தாலுகா பேராவூர் ஊராட்சி கத்திரிமூலை கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுயம்பு ஆகாச அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்களின் முயற்சியால் பலஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது.

    குடமுழுக்கை விழா கடந்த 9-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாகுதி செய்யப்பட்டது. குடமுழுக்கு தினமான நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மஹாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத மந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் குடமுழுக்கு நடைபெற்றது.

    இதேபோல பரிவார தெய்வங்களான பதினெட்டாம்படி கருப்புசாமி, மதுரைவீரன் மற்றும் கேதாரகவுரி அம்மனுக்கு புதுப்பீடம் அமைத்து அஷ்டபந்தன மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குடமுழுக்கை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கத்திரிமூலை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    Next Story
    ×