search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வண்ண மின்விளக்குகளால் அருணாசலேஸ்வரர் கோவில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
    X
    வண்ண மின்விளக்குகளால் அருணாசலேஸ்வரர் கோவில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி (நாளை) முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்படத் தொடங்குகிறது.

    அதனால் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.

    இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×