search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மரக்கேடயத்தில் சாமி பக்தர்கள் உடன் சுற்றி வந்த காட்சி. உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் சாமி.
    X
    மரக்கேடயத்தில் சாமி பக்தர்கள் உடன் சுற்றி வந்த காட்சி. உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் சாமி.

    ராமேசுவரம் கோவிலில் பிரதோஷ பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி

    வழக்கமாக பிரதோஷத்தன்று சாமி தங்க ரிஷப வாகனத்தில் வைத்து 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனாலும் நேற்று ராமேசுவரம் கோவிலில் மரத்திலேயே சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடை பெற்றது.
    ராமேசுவரம் கோவிலில் பிரதோஷ பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் கொரோனா குறைந்து வருவதன் எதிரொலியாக கடந்த 15-ந் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி அளவில் சாமி மரக்கேடயத்தில் வைக்கப்பட்டு 3-ம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப் போது பிரகாரத்தின் நான்குவாசல் பகுதியிலும் வைத்து சாமிக்கு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. சாமி பிரகாரத்தை சுற்றி வந்த பின்னர் சாமி சன்னதி எதிரே உள்ள பெரிய நந்திக்கும் மற்றும் கருவறையில் உள்ள சாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக ராமேசுவரம் கோவிலில் பிரதோஷ நாளன்று சாமியுடன் பக்தர்கள் உலாவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அரசின் உத்தரவை தொடர்ந்து 6 மாதத்திற்கு பிறகு பிரதோஷ தினமான நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சாமியுடன் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வழக்கமாக பிரதோஷத்தன்று சாமி தங்க ரிஷப வாகனத்தில் வைத்து 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனாலும் நேற்று ராமேசுவரம் கோவிலில் மரத்திலேயே சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடை பெற்றது. பக்தர்கள் மத்தியில் மிகுந்த ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே இனிவரும் மாத பிரதோஷ நாட்களில் வழக்கம்போல் சாமி தங்க ரிஷப வாகனத்தில் வைத்து உலா வரும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று பக்தர்கள் திருக் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×