search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்த காட்சி.
    X
    பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்த காட்சி.

    திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது

    திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
    திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    சிறப்பு பூஜைகள் மேற்கொண்ட பின்னர் மதியம் 12 மணி முதல் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பிரமோற்சவத்தையொட்டி நாளை (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. தொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான 7-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது.

    மாலை 5.10 மணி முதல் 5.30 மணி வரை பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து வரும் 8-ந்தேதி காலை சின்ன சே‌ஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 9-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 10-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 11-ந்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட சேவை, 12-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகனம், இரவு கஜ வாகனம், 13-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 14-ந்தேதி காலை 8 மணிக்கு தேருக்கு மாற்றாக சர்வ பூபால வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

    பிரமோற்சவத்தின் கடைசி நாளான 15-ந்தேதி காலை 6 மணி முதல் 8 வரை பல்லக்கு உற்சவம், காலை 8 மணி முதல் காலை 11 மணிக்கு இடையே திருமஞ்சனம் மற்றும் அயன மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

    இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்று திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருப்பதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக 2 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களிலும் தினமும் 1,000 பக்தர்கள் வீதம் 9,000 பக்தர்கள் இலவச சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆந்திராவின் 13 மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்படும்.

    மலைவாழ் மக்கள் மற்றும் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    பின்தங்கிய பகுதிகளில் மதமாற்றத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு ரூ.25 கோடி செலவில் ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 502 கோவில்களை தேவஸ்தானம் இலவசமாக கட்டிக்கொடுத்தது. இங்கு தினசரி பூஜை செலவையும் தேவஸ்தானம் ஏற்றுள்ளது.

    திருப்பதியில் நேற்று 28,601 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,652 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    Next Story
    ×