search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகள் ஊர்வலம்(கோப்பு படம்)
    X
    திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகள் ஊர்வலம்(கோப்பு படம்)

    திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகள் ஊர்வலம் 3-ந்தேதி தொடங்குகிறது

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 1840-ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், மற்றும் பத்மநாபபுரம் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகள் வைத்து பூஜை செய்யப்படும். விழா முடிவடைந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவது மரபு.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் 3-ந் தேதி புறப்பட்டு செல்கிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சாமி சிலைகள் கொண்டு செல்வதில் சில மாற்றங்களை தமிழக மற்றும் கேரள அரசு கடந்த ஆண்டைப் போன்று செய்துள்ளது.

    இதுதொடர்பாக இரு மாநில அரசுகளும் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த ஆண்டை போன்று சாமி சிலைகளை தட்டு வாகனங்களில் எடுத்துச் செல்வது என்றும், அதே சமயத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் சாத்தி வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும், களியக்காவிளை எல்லையில் இருந்து கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக 2-ந் தேதி காலை 8 மணிக்கு தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைகிறது.

    3-ந் தேதி காலை 7.30 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகை மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை கேரள அறநிலையத்துறை அமைச்சர், தொல்லியல் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளி மலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகளும் திருவனந்தபுரத்திற்கு தட்டு வாகனங்களில் புறப்படுகிறது.

    5-ந்தேதி இரவு 8 மணிக்கு பத்மநாபசுவாமி கோவிலை சென்றடைந்ததும் மன்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வலிய காணிக்கை நடக்கிறது. அதன் பின்னர் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்ககம் உள்ளே உள்ள நவராத்திரி கொலு மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரிய சாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்ட அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜை நடக்கிறது.

    நவராத்திரி விழா முடிந்தவுடன் சாமி சிலைகள் மீண்டும் திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், நவராத்திரி கொலு அமைப்பு, கேரள அறநிலையத் துறையினர் ஆகியோர் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×