search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.
    X
    மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

    மதுரையில் ஆவணி மூலத்திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் சுந்தரேசுவரர்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் தடுப்புக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் கோவிலுக்கு உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரமாக நடந்து வருகின்றன.

    நேற்று மதியம் முத்தாய்ப்பாக “இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை” நடந்தது. இதையொட்டி கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரேசுவரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை சுமந்த திருக்கோலத்தில், மீனாட்சியுடன் காட்சி தந்தார்.

    அப்போது சுந்தரேசுவரராக ஹலாஸ் பட்டரும், பாண்டிய மன்னராக அசோக் பட்டரும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    வழக்கமாக இந்த திருவிழா பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்புக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் கோவிலுக்கு உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.

    “பிட்டுக்கு மண் சுமந்த லீலை” குறித்த புராண வரலாறு வருமாறு:-

    முன்பொரு முறை வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வர வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணையிட்டார். அப்போது வந்தி என்ற பிட்டு விற்கும் மூதாட்டியின் வீட்டில் இருந்து செல்ல வேறு யாரும் இல்லாததால் தவித்தார். அப்போது இறைவனே கூலி ஆளாக வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறியுள்ளார். இறைவனோ, அவரது பங்கிற்கு ஒதுக்கிய கரையை அடைக்காமல் பிட்டு சாப்பிட்டு, ஆடிப்பாடி, ஆழ்ந்த துயில் கொண்டார். அப்போது அந்த பணியை பார்வையிட வந்த பாண்டிய மன்னன், தன் கையில் இருந்த பிரம்பால் படுத்திருந்த இறைவன் முதுகில் அடித்துள்ளார். அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் பட்டது. அரசன் உண்மை உணர்ந்தார். அப்போது இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காக தாம் இவ்வாறு செய்ததாகவும் மன்னருக்கு உரைத்தார். மன்னரும் மாணிக்கவாசகரை இறை பணிக்கு விடுவித்து, தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

    Next Story
    ×