search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவில்
    X
    கள்ளழகர் கோவில்

    அழகர்கோவில் ஆடி திருவிழா தேரோட்டம் இந்த ஆண்டும் ரத்து

    அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் இந்த ஆண்டும் தேரோட்டம் உள் பிரகாரத்திலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் பிரமோற்சவ திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும். தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற இன்று முதல் 26-ந்தேதி வரை ஆடி திருவிழா கோவிலின் உள் பிரகார வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திருவிழாவில் வருகிற 16-ந்தேதி (நாளை) கொடியேற்றமும் மற்றும் 24-ந்தேதி தேரோட்டமும் கோவில் உள் பிரகாரத்திலேயே நடைபெறும்.

    திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    கொடியேற்றம் நடைபெறும்  16-ந்தேதி (நாளை) காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று காலை 6 மணிக்கு மேல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 24-ந்தேதி ஆடி பவுர்ணமி அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணிக்கு மேல் கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2-வது ஆண்டாக ஆடி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அரசின் மறு உத்தரவு வரும் வரை கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்குவதற்கும், நூபுர கங்கை தீர்த்தத்தில் குளிப்பதற்கும், கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்கும் தடை நீடிக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×