search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    தெய்வானை தவமிருந்த தலம்

    தெய்வானை தோளினில் அமர்ந்த கிளி குமரன்.... குமரன்..... என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை என இனம் கண்டு கொண்டது.
    தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள். தேன்காடு எனும் மதுவனத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள். பன்னீர் விருட்சத்தின் கீழ் அமர்ந்தாள். தியானத்திற்குரியவரை மனதில் நிறுத்தினாள். உள்ளம் குழைந்தது. முகத்தில் ஒளி கூடியது.

    வெகு விரைவில் தவம் கனியும் என்பதாக பன்னீர் மரம் சிலிர்த்தது. இலைகள் முல்லை அரும்பு மழையாக பொலபொலவென கொட்டியது. தெய்வானை தேவி அழகாக ஓளிர்ந்தாள். காற்றில் மிதக்கும் இலக்கற்ற சிறகுபோல நடந்து தெய்வானை முன்பு நின்றான், கந்தன். தெய்வானை தோளினில் அமர்ந்த கிளி குமரன்.... குமரன்..... என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை என இனம் கண்டு கொண்டது.

    தெய்வக் காதல் காரணமற்று பொங்கியது. உள்ளத்தினிடையே உரையாடல் இருக்க வார்த்தைகளாக என்ன பேசுவது என கற்சிலையாகி நின்றனர். தெய்வானை கந்தனை நமஸ்கரித்து எழுந்தாள். கைகூப்பியபடியே வானவர் உறையும் தேவலோகம் சென்றாள். தவமிருந்து தெய்வானை கந்தனை தரிசித்த தலமே கந்தன்குடி.

    தனிச்சந்நதியில் தெய்வானை தெற்கு நோக்கி நின்றகோலத்தில் கைகளில் கிளியோடு, தவம்முடித்த களை முகமெங்கும் பரவியிருக்க, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்திருக்க நின்றகோலத்தில் அருள்கிறாள். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை கடந்தால் கந்தன்குடியை காணலாம்.
    Next Story
    ×