என் மலர்

  ஆன்மிகம்

  அபிராமி அந்தாதி
  X
  அபிராமி அந்தாதி

  ஆழ்மனதின் எண்ணங்களை நிறைவேற்றும் அபிராமி அந்தாதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அபிராமி அந்தாதியை தொடர்ந்து 48 நாட்கள், அதிகாலையிலும், இரவிலும் பாடி வந்தால், திருக்கடையூர் அபிராமியின் அருள் கிடைக்கும். துன்பமான வாழ்வு மாறி இன்பம் பெருகும்.
  ‘தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா

  மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

  இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே

  கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!’

  ‘இந்த உலகில் வாழ, ஒருவருக்கு கண்டிப்பாக கல்வி, செல்வம், நெஞ்சில் வஞ்சமில்லாத அன்பர்களின் கூட்டுறவு, எந்த ஒரு சூழ்நிலையிலும் சோர்வடையாத மனம் போன்றவை வேண்டும். இவற்றையெல்லாம் தருவது, மலர் சூடிய கூந்தலைக் கொண்ட திருக்கடையூர் அபிராமி அன்னையின் அருள் ததும்பும் விழியோரப் பார்வைதான்’ என்கிறார், மேற்கண்ட அபிராமி அந்தாதி பாடலைப் பாடிய, அபிராமி பட்டர்.

  இத்தகையை சிறப்பு மிக்க அபிராமி அந்தாதி தொகுப்பு தோன்றியது, ஒரு தை அமாவாசை நன்னாளில். அந்த தொகுப்பு தோன்றிய விதத்தையும், அதைப் பாடிய அபிராமிபட்டரையும் பற்றி இந்தக் கதையின் வாயிலாக அறிந்துகொள்வோம்.

  திருக்கடையூரில் வீற்றிருக்கும் அன்னை அபிராமி மீது, அளவற்ற பக்தி கொண்டிருந்தவர் சுப்பிரமணிய பட்டர். இவர் ஆலயத்தில் பஞ்சாங்கம் படித்து சொல்பவராகப் பணியாற்றி வந்தார். தினமும் பஞ்சாங்கம் படித்தபின்பு, அன்னை அபிராமியின் சன்னிதி எதிரிலேயே அமர்ந்து, அம்பாளை நினைத்து தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அப்படி தியானத்தில் இருக்கும்போது, அவரைச் சுற்றி எது நடந்தாலும் அவருக்குத் தெரியாது. கோவிலுக்கு வரும் அனைத்துப் பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே எண்ணி வழிபடுவார்.

  தஞ்சையை ஆட்சி புரிந்து வந்த மராட்டிய மன்னர் சரபோஜி, ஒரு தை அமாவாசை நாளில் பூம்புகார் சென்று கடலில் நீராடி, திருக்கடையூர் ஆலயம் வந்தார். மன்னனைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் வரவேற்று வணங்கி நிற்க, சுப்பிரமணிய பட்டர் மட்டும், அபிராமி சன்னிதியில் அன்னையை நினைத்து தியானத்தில் மூழ்கியிருந்தார்.

  “அவர் யார்?” என்று கோவில் அர்ச்சகர்களிடம் மன்னர் விசாரித்தார்.

  அவர்களோ, “அரசே! இவர் ஒரு பித்தர். எப்போதும் இப்படித்தான் அபிராமியின் சன்னிதியில் கண்களை மூடி நெடுநேரம் தியானத்தில் இருப்பார். இங்கு ஆலயத்தில் தினமும் பஞ்சாங்கம் படிப்பவர் இவர்” என்றுக் கூறினர்.

  உடனே தியானத்தில் அமர்ந்திருந்த சுப்ரமணிய பட்டரின் அருகில் சென்ற மன்னர், “சுப்பிரமணியம்.. இன்று என்ன திதி?” என்றுக் கேட்டார். மன்னர் கேட்ட சமயத்தில் சுப்பிரமணியம், முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய அபிராமி அம்மனின் திருமுக தரிசனத்தை நினைத்து உருகியபடி இருந்தார். எனவே “பவுர்ணமி” என்றுக் கூறிவிட்டார்.

  மன்னனுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘இன்று அமாவாசையிலும் புனிதத்துவம் பெற்ற தை அமாவாசை. அதை மாற்றி கூறுகிறாரே’ என்று மனம் கொந்தளித்தவர், “இன்று இரவு பூரணச் சந்திரன் வானில் உதிக்காவிட்டால், உமக்கு மரண தண்டனை” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

  அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த சுப்பிரமணிய பட்டர், மன்னர் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகே தன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். அவரிடம் கோவில் அர்ச்சகர்கள் நடந்ததைக் கூறினர். மேலும் சுப்பிரமணியத்திடம், “அமாவாசையில் முழு நிலவு எப்படித் தோன்றும்?” என்றும் கேட்டனர்.

  அதற்கு சுப்பிரமணிய பட்டர், “என்னை அந்த நிலையில் இருந்து அமாவாசையை, பவுர்ணமி என்று சொல்ல வைத்தவள் அன்னை அபிராமி. எனவே அவளே இதற்கும் நிச்சயம் பதில் சொல்வாள்” என்றார்.

  அமாவாசையில் முழுநிலவு தோன்றாது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே மன்னனின் கட்டளைப்படி, சுப்பிரமணிய பட்டருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி ஆலயத்தின் வெளியில் குழி தோண்டி அக்னிக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்கு மேல் நூறு கயிறுகளுடன் கூடிய உறி ஒன்றைக் கட்டித் தொங்க விட்டார்கள். அதற்கு ‘அரிகண்டம்’ என்று பெயர். தண்டனைக்குட்பட்டவர் நூறு பாடல்கள் பாட வேண்டும். ஒரு பாடலுக்கு ஒரு கயிறு என, அவர்கள் பாடப்பாட கயிறு ஒவ்வொன்றாக அறுக்கப்பட்டு வரும். நூறாவது பாடலுக்குள் அவர்களுக்கு இறையருள் கிடைக்காவிட்டால், நூறாவது கயிறும் அறுக்கப்பட்டு உறியில் இருப்பவர் அப்படியே அக்னிக் குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பார்.

  மாலைநேரம் வந்தது. அந்த உறியில் சுப்பிரமணிய பட்டரை ஏற்றினர். அக்னிக் குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சுப்பிரமணிய பட்டர், அபிராமி அம்மனின் கருவறை நோக்கி வணங்கிவிட்டு சுற்றியிருந்த பக்தர்களுக்கும், மன்னனுக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ‘தாரமர் கொன்றையும்...’ எனத் தொடங்கும் விநாயகர் துதியைப் பாடி விட்டு, அபிராமியைப் போற்றி பாடல்களைப் பாடினார். அதுவே அபிராமி அந்தாதியானது. ஒவ்வொரு பாடல் நிறைவிலும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது. 78 பாடல்கள் முடிந்துவிட்டன. 78 கயிறுகளும் அறுக்கப்பட்டு விட்டன. 79-வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு...’ என்று பாடத் தொடங்கினார், சுப்பிரமணிய பட்டர். அந்தப் பாடலைத் தொடங்கியதுமே, அவருக்கு காட்சி கொடுத்த அபிராமி அன்னை, தன்னுடைய காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினாள். அது முழு மதியாக மாறி வானில் ஒளி வீசியது.

  இப்படி அன்னையிடம் வேண்டிய பக்தனுக்காக, அமாவாசை நாளில் வானில் முழு நிலவு தோன்றியது. மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அன்னை அபிராமியின் அருள் திறத்தையும், சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மன்னன், சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டி, ‘அபிராமி பட்டர்’ என்னும் திருப்பெயரை அவருக்குச் சூட்டினார்.

  அப்போது வானில் அசரீரி எழுந்தது. “அன்பனே! நீ மன்னனிடம் கூறியச் சொல்லை மெய்ப்பித்து விட்டோம். தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக” என்றது அபிராமி அன்னையின் அமுதக் குரல். அன்னையின் சொல்படி தொடர்ந்து 100 பாடல்கள் பாடி, நூற்பயனாக

  ‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

  பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

  காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்புவில்லும்

  சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு

  ஒரு தீங்கும் இல்லையே’

  என்ற பாடலுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் அபிராமி பட்டர்.

  தன்னுடைய பக்தியால் அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு, சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கிச் சிறப்பித்தார். அதற்குச் சான்றாக விளங்கும் ‘உரிமை செப்புப் பட்டயம்’ ஒன்று அபிராமி பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

  ஆண்டு தோறும் தை அமாவாசை நாளில், அபிராமி பட்டரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு, திருக்கடையூர் திருத்தலத்தில் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை நேரில் தரிசிப்பவர்கள் கனிவான வாழ்க்கையைப் பெறுவார்கள். மேலும் அபிராமி அந்தாதியை தொடர்ந்து 48 நாட்கள், அதிகாலையிலும், இரவிலும் பாடி வந்தால், திருக்கடையூர் அபிராமியின் அருள் கிடைக்கும். துன்பமான வாழ்வு மாறி இன்பம் பெருகும்.

  அமைவிடம்

  சீர்காழியில் இருந்தும், மயிலாடுதுறையில் இருந்தும் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் திருத்தலம் அமைந்துள்ளது.
  Next Story
  ×