search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொண்டி அருகே சுற்றுலா தலமாகும் இடையன்வயல் ராமர் பாதம் கோவில்
    X
    தொண்டி அருகே சுற்றுலா தலமாகும் இடையன்வயல் ராமர் பாதம் கோவில்

    தொண்டி அருகே சுற்றுலா தலமாகும் இடையன்வயல் ராமர் பாதம் கோவில்

    ராமபிரான் ஆலயம் என்பதாலும் வரலாறு சிறப்பு பெற்ற இடமாக விளங்குவதால் இதனை சுற்றுலாதலமாக அறிவித்துள்ள மத்திய, மாநில அரசுகள் இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
    தொண்டி :

    ராமபிரான் தம்பி லெட்சுமணனோடு சீதாதேவியை தேடி இலங்கைக்கு செல்லும் வழியில் தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானத்தில் கடலில் நீராடி அவரது தந்தை தசரதனுக்கு தில தர்ப்பணம் கொடுத்து சிவபூஜை செய்து வழிபட்டு உள்ளார்.

    இங்கு இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இடையன் வயல் எனும் இடத்தில் அமைந்துள்ளது ராமர் பாதம்கோவில். வருணனிடம் ராமர் தனது நினைவாக பாதங்களை வைத்து பூஜை செய்யுமாறு வரம் அளித்ததை தொடர்ந்து இங்கு கோவில் கட்டி வழிபட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள ராமர் பாதம் ஆலயத்தை பராமரித்து இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

    ராமபிரான் ஆலயம் என்பதாலும் வரலாறு சிறப்பு பெற்ற இடமாக விளங்குவதால் இதனை சுற்றுலாதலமாக அறிவித்துள்ள மத்திய, மாநில அரசுகள் இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இங்கு பயணியர் விடுதி, சமுதாய கூடம், அலங்கார வளைவு, அங்கார சாலைகள், கழிப்பறை வசதி, பூங்கா, சுற்றுச்சுவர், ஆழ்குழாய், குடிநீர் வசதி, சிதிலமடைந்த கோவில் சீரமைப்பு மற்றும் புதிய கோவில் கட்டுதல், சுற்றியுள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு படித்துறை, முள்வேலி அமைத்தல், வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

    சுற்றுலா தலம்

    இதற்காக மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புல்லக் கடம்பன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெயர்பலகை வைக்கப்பட்டு இங்கு மண்டி கிடந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து புல்லக்கடம்பன் ஊராட்சி மன்ற தலைவர் மாதவி கண்ணன் கூறியதாவது:-வரலாற்று சிறப்பு பெற்ற இடையன் வயல் ராமர் பாதம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் இங்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தினமும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஏற்பாடு

    சுமார் 16.16 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர்பாத கோவில், விநாயகர், சுப்பிரமணியர், கஜலெட்சுமி ஆலயங்கள், மன்னர்கள் தங்கும் விடுதி, 4 குளங்கள், சுரங்கப்பாதை போன்ற பல்வேறு அம்சங்களும் இங்கு உள்ளது. கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த உடன் ராமேசுவரம் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இங்கு இருந்த கோவில்கள், கல்வெட்டுகள் போன்ற பல வரலாற்று தொடர்புடைய சின்னங்கள் மண்ணில் புதைந்துள்ளன. எனவே இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என மத்தியஅரசு, பிரதமர் மற்றும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து மனுக்கள் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×