என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் பொலிவிழந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.
    X
    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் பொலிவிழந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெறுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் புராதனவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோவிலில் மதுரை சவுண்ட கோப்பரகேசரவர்மன், ராஜகேசரி வர்மன், ராஜேந்திரசோழ தேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மற்றும் விஜய நகரத்து வெங்கடபதி ராயர் ஆகியோர் திருப்பணி வேலைகள் செய்துள்ளதற்கான சான்றுகளும் கோவில் கல்வெட்டுகளில் கிடைக்கிறது. குடமுழுக்கு விழா நடைபெற்று 100 ஆண்டுகளை கடந்த நிலையில், திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2001-ம் ஆண்டு இக் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பிறகு இன்னும் குடமுழுக்கு செய்யப்படவில்லை.

    பிரதி மாதம் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, சித்திரை தமிழ் வருட பிறப்பு, வைகாசி விசாக திருவிழா 12 நாட்கள், மாசிமகம் ஆகியன இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். இதில் திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனையும், புராதனவனேஸ்வரரையும் வழிபாடு செய்துவருகின்றனர். இவைதவிர வருடந்தோறும் எண்ணற்ற திருமணங்கள் இக்கோவிலில் நடைபெற்று வருகிறது

    பல்வேறு சிறப்புகள் பெற்றதும் காலத்தால் மிகவும் பழமையான இக்கோவில், தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வந்தன. தற்சமயம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்கள் வழிபாடு நடைபெறவில்லை. குடமுழுக்கு விழா நடைபெற்று 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் பெரும்பாலானவை சேதமடைந்து விட்டன. வர்ணபூச்சுகள் அனைத்தும் மங்கி விட்டன. கோவில் கோபுரங்களில் செடிகள் வளர தொடங்கிவிட்டன.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவிலில் இருந்த கொடி மரமும் சாய்ந்து விழுந்து விட்டது. ஆனால் இதுவரை மாற்று கொடிமரம் நடப்படவில்லை. கோவில் வளாகத்தில் வடபகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது. குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறும் கடந்த 2 மாதமாக செயல்படவில்லை. இதனால் குளத்தில் இருக்கும் தண்ணீரின் அளவு வெகு விரைவாக குறைந்து வருகிறது. இதனால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் வருபவர்களும் தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    எனவே இனியும் தாமதிக்காமல் புராதனவனேஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகளை தொடங்கி குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.
    Next Story
    ×