search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) வைணவ ஆச்சாரியார் பாஷ்யங்கார் உற்சவம் தொடங்கி 19 நாட்கள் நடக்கிறது. வருகிற 18-ந்தேதி சாத்துமுறை உற்சவம் நடக்கிறது.
    திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வெங்கடாசலபதியை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட கீழே திருச்சானூரில் உள்ளது. வராகசாமி ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு அருகில் தான் உள்ளார்.

    இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் மட்டுமே. அவரை, வடமாநிலங்களில் பாஷ்யங்கார் என்று அழைக்கின்றனர். பாஷ்யங்கார் எனப்படும் ராமானுஜர் ேஹாலி வைஷாக மாதத்தில் ஆருத்ரா நட்சத்திரத்தில் பிறந்தார்.

    ராமானுஜர் திருமலைக்கு வந்து காடு திருத்தி, வீதி அமைத்து திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்தார். அதில் இருந்து தான் திருமலை நகரம் தோன்றியது. இன்னும் திருமலையில் ராமானுஜர் வீதி உள்ளது.

    திருச்சி ஸ்ரீரங்கம் பெரிய கோவிலின் நடைமுறைகளை திருமலைக்கும் கொண்டு வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்தார். அத்துடன் பல்வேறு திருப்பணிகளை செய்தார்.

    ஆகையால் தான் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ராமானுஜரை போற்றி வருகிறது. அவரை போற்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் பாஷ்யங்கார் உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலை, முதல் மணியோசைக்குப் பின் ராமானுஜர் தங்கத்திருச்சி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார்.

    18-ந்தேதி இரவு 7 மணியில் இரவு 9.30 மணிவரை பாஷ்யங்கார் சாத்துமுறை உற்சவம் நடக்கிறது. அன்று நடக்கும் சகஸ்ர தீபலங்கார சேவைக்குப் பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார்கள். மற்றொரு தங்கத்திருச்சி பல்லக்கில் பாஷ்யங்கார் எழுந்தருளி உலா வருகிறார். விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×