
திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் இக்கோவில் உற்சவர் செந்தாமரைகண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்காக புறப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள், தாயார் எழுந்தருளினர்.
அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் நள்ளிரவு வரை பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திருவெள்ளறை சென்றடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. தேரோட்டம் வரும் 6-ந் தேதி காலை நடைபெறுகிறது.