
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்று காலை, 8.30 மணிக்கு பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மாலை, 4.30 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறுவாணி ரோடு மற்றும் ரத வீதிகள் வழியாக அசைந்து, அசைந்து சென்ற தேர்கள் நிலையை அடைந்தன. இதைத்தொடர்ந்து, நாளை (சனிக்கிழமை) இரவு தெப்பத் திருவிழாவும், வரும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் மற்றும் பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது. இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.