search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்
    X
    நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்

    நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்

    அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பாடல் பெற்ற சைவசமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    முன்னொரு காலத்தில் சைவ சமயத்திற்கும், சமண சமயத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தை சேர்ந்தவர்கள் சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் வகையில் அப்பரை கல்லில் கட்டி கடலில் தூக்கி போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான் "கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே" என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

    அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இந்த சம்பவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவனின் அருள் சிறப்பை உலகுக்கு உணர்த்தி இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்று ஆன்மிக வரலாறு கூறுகிறது. அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பாடல் பெற்ற சைவசமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    கோவிலின் உள்ளே அம்பாள் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பருக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் அப்பரை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×