search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மக திருவிழாவில் விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி கடந்த 17-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் 6-ம் நாள் திருவிழாவான நேற்று கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். விபசித்து முனிவர் தனி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து பஞ்சமூர்த்திகளுக்கும், விபசித்து முனிவருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள், நேர் எதிர் மண்டபத்தில் அமர்ந்திருந்த விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய என்கிற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து பஞ்சமூர்த்திகள் விபசித்து முனிவருக்கு காட்சி அருளியபடி கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது பக்தர்கள் மலர்தூவி பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விருத்தாசலம் கடைவீதி, நான்கு கோட்டை வீதி வழியாக வீதி உலா சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 26-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27-ந் தேதி(சனிக்கிழமை) தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
    Next Story
    ×