search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை

    திருப்பதியில் வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் இந்த சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் தமிழில் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

    வருகிற புதன்கிழமை மார்கழி மாதம் நிறைவு பெற்றாலும், வியாழக்கிழமை உதயத்துக்கு 2 மணி நேரத்துக்கு பின்னரே சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
     
    எனவே பஞ்சாங்கப்படி அன்று காலை 9 மணிக்கு மேல் தை மாத கடிகை தொடங்க உள்ளது. சூரிய உதயத்துக்கு பின் தொடங்கும் திதி மற்றும் நட்சத்திரங்களை மட்டுமே தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால் வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுர சேவை நடத்தப்படும்.

    அன்றுடன் இச்சேவை நிறைவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை 15-ந்தேதி அதிகாலையில் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்கள் மற்றும் கோசாலைகளில் கோ பூஜைகள் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    தேவஸ்தான தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பூஜை நடத்தப்பட உள்ளது. அதே நாளில் குண்டூரில் நரசராவ்பேட்டை பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் காமதேனு பூஜை நடக்கிறது.

    திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதியில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையில் இருந்து பெறப்படும் பஞ்ச கவ்யத்தின் மூலம் பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். தற்போது பஞ்சகவ்யத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    குஜராத்தில் பஞ்சகவ்யத்தில் இருந்து சாம்பிராணி வத்திகள், ஊதுவத்திகள், குளியல் சோப்புகள், சுத்திகரிக்கும் பொருள்கள், உரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.

    அங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்தி நடைமுறைகள், திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் கோசாலைகளிலும் பின்பற்றி தேவஸ்தான கோசாலைகளிலும் இப்பொருள்களை தயாரிக்க பஞ்சகவ்யத்தை கொண்டு மேலும் புதிய பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி கண்டறிய வேண்டும் என்றார்.
    Next Story
    ×