search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டதை படத்தில் காணலாம்.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னக்காப்பு அலங்காரம்

    கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 51 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்து பக்தர்களால் அன்னாபிஷேகம் தொடக்கப்பட்டு நடைபெற்று வந்தது. அன்னாபிஷேக பூஜைகள் தொடங்குவதற்கு முன்பு, கணக்க விநாயகருக்கு அபிஷேகம் முடித்த பின்னரே, அதற்கான பணிகள் தொடங்கப்படுவது வழக்கம்.

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நூறு மூட்டை பச்சரிசியை கோவில் வளாகத்திலேயே சமைத்து, அதனை 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு சாத்தப்பட்டு, மாலை 6.45 மணியளவில் 5 அடுக்கு தீபங்கள் காட்டப்படும். பின்னர் இரவு 8 மணிக்கு மேல் லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று நடக்க இருந்த 36-வது அன்னாபிஷேகத்திற்கு, கொரோனா அச்சம் காரணமாக அரசு தடைவிதித்தது. இதையடுத்து அன்னாபிஷேகத்திற்கு பதிலாக சிவலிங்கத்திற்கு நேற்று அன்னக்காப்பு (அன்ன அலங்காரம்) அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை கணக்க விநாயகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு சந்தனம், மஞ்சள், திருநீர், தேன், பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து லிங்கம் அலங்கரிக்கப்பட்டு 5 அடுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    மேலும் 51 கிலோ பச்சரிசி கொண்டு குழைவாக சமைக்கப்பட்ட அன்னம் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டு, மாலை 6.45 மணியளவில் ஐந்து அடுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கங்கைகொண்ட சோழபுரம் பகுதி பக்தர்களின்றி வெறுச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×