search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று தொடக்கம்
    X

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று தொடக்கம்

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    முருகன் கோவில்களிலேயே பழமை வாய்ந்த தென்பழனியில் பழனியாண்டியாகவும், சென்னை வடபழனியில் வடபழனி ஆண்டவராகவும் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் என்று அழைக்கப்படும் வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகம் விடையாற்றி பெருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து வரும் 29-ந்தேதி வரை நடக்கும் விழாவில் மங்களகிரி விமானம், சூரியபிரபை, சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாகம், யானை, குதிரை, மயில் வாகனங்கள் மற்றும் புஷ்ப பல்லக்கில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகர் காலை 7 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 15-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 20-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தினசரி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குறிப்பாக தினசரி மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தெய்வீக பாடல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் முதல் நாள் அதாவது 20-ந்தேதி இரவு 7 மணிக்கு வீரமணி ராஜூவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவி ஆணையர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×