search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது
    X

    திருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான விசாக திருவிழாவின் தொடக்கமாக இன்று (வியாழக்கிழமை) வசந்த உற்சவம் தொடங்குகிறது. 19-ந்தேதி வரை இத்திருவிழா தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளுகிறார். அங்கு நீர்நிலையில் அமர்ந்து சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதேபோல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 5 மணி அளவில் சண்முகர் சன்னதியில் இருந்து கொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமான் எழுந் தருளுகிறார். இதனையடுத்து சண்முக பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    இதனையொட்டி மதுரை வைகை ஆற்று படுகையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந்தேதி மொட்டையரசுதிடலுக்கு சாமி எழுந்தருளுகிறார்.
    Next Story
    ×