search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது
    X

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவ பக்தியில் சிறந்து விளங்கிய ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவளுடைய தாய் வடிவில் வந்து பிரசவம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.

    இதனால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 14-ந்தேதி செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயாக வந்து பிரசவம் பார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. காலை 5.53 மணிக்கு மேல் மீன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×