search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
    X

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் பிரசித்திப்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்துக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கொடி கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 14-ந் தேதி தன்னைத்தான் பூஜித்தல், மகேஸ்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 18-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 21-ந் தேதி சப்தஸ்தான திருவிழா நடக்கிறது. அன்று ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    22-ந் தேதி ஐயாறப்பர் கோவில் உள்பட 7 கோவில்களில் இருந்து சாமி பல்லக்குகள் திருவையாறு தேரடியில் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×