என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ சாந்தி பூஜை
    X

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ சாந்தி பூஜை

    பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்தை முன்னிட்டு கைலாசநாதர் சன்னதியில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது.
    பழனி முருகன் கோவிலில், கடந்த மார்ச் 15-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி நிறைவடைந்தது. திருவிழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கைலாசநாதர் சன்னதியில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. முன்னதாக மலைக்கோவில் மண்டபங்கள், சன்னதிகள் ஆகியவை புனிதநீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், 2 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜையும், ஸ்கந்த ஹோமம், அஸ்திர ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து உச்சி கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகமும், கலச பூஜையும், உற்சவ சாந்தி பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சன்னதியில் 6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜையும், யாகமும் நடந்தது. இதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் கலச அபிஷேகமும், அதைத்தொடர்ந்து உற்சவ சாந்தி பூஜையும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பங்குனி உத்திர திருவிழா தொடங்கிய நாளில் இருந்து மலைக்கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் பள்ளியறை பூஜைகள் நடைபெறவில்லை. தற்போது உற்சவ சாந்தி பூஜைகள் நடந்ததையொட்டி நேற்று முதல் மலைக்கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் பள்ளியறை பூஜைகள் தொடங்கியது. உற்சவ சாந்தி பூஜையை பழனி கோவில் பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் குருக்கள்கள் சந்திரமவுலி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். 
    Next Story
    ×