என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 5-ந்தேதி தொடங்குகிறது
    X

    குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 5-ந்தேதி தொடங்குகிறது

    வாடிப்பட்டியை அடுத்த குலசேகரன்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வாடிப்பட்டியை அடுத்த குலசேகரன்கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பெருமையும், பழமையும் வாய்ந்த மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா வருகிற 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். அப்போது மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் செய்யப்படும்.

    இதைத்தொடர்ந்து திருவிழாவையொட்டி தினந்தோறும் மாலை 6 மணிமுதல் 7.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. திருவிழாவின் முதல்நாளில் மீனாட்சி அலங்காரமும், 2-ம் நாள் ராஜராஜேசுவரி அலங்காரமும், 3-ம் நாள் காமாட்சி அம்மன் அலங்காரமும், 4-ம் நாள் ஓம்சக்தி அலங்காரமும், 5-ம் நாள் கனகதுர்கை அலங்காரமும், 6-ம் நாளில் சரசுவதி அலங்காரமும், 7-ம் நாள் மகாலட்சுமி அலங்காரமும், 8-ம் நாள் ராஜ அலங்காரமும், 9-ம் நாள் சிம்ம வாகன ரூபிணி அலங்காரமும், 10-ம் நாள் மலரனை அலங்காரம், 11-ம் நாள் மூகாம்பிகை அலங்காரமும் செய்யப்படுகிறது.

    பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12-ம் நாளில் தாதம்பட்டி இரட்டை பிள்ளையாா் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் சுந்தரேசுவரரை அழைத்துச்சென்று வல்லப கணபதி கோவிலில் மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடக்கிறது. பின்னர் மாலை மாற்றுதல் உற்சவமும், திருச்சீா் மற்றும் முளைப்பாரி எடுத்து மீனாட்சி அம்மன் கோவிலை அடைதல் நடைபெறும். 13-ம் நாளான 17-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக காலை 9 மணி முதல் 10.25 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    தொடர்ந்து மறுநாள் 14-ம் திருநாளில் தேரோட்டம் நடக்கிறது. 15-ம் நாளில் அம்மனுக்கு சாந்த சொரூபிணி அலங்காரம் செய்யப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினரும், குலசேகரன்கோட்டை கிராம மக்களும் செய்து வருகின்றனா்.
    Next Story
    ×