search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர வழிபாடு
    X

    சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர வழிபாடு

    சாதி, சமய வேறுபாடின்றி குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர திருநாளில் குடும்பத்தோடு சென்று வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு பரம்பரையாக தொடர்கிறது.
    தமிழக மக்களின் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது சாஸ்தா வழிபாடாகும். குடும்பம் மற்றும் குல விருத்திக்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. சாதி, சமய வேறுபாடின்றி குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர திருநாளில் குடும்பத்தோடு சென்று வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு பரம்பரையாக தொடர்கிறது.

    பக்தர்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட பல இடங்களில் சாஸ்தாவும், ஐயனாரும் அவதரித்தனர். கலியுகத்தில் ஐயப்பன் அவதாரம் எடுத்து கேரள மாநிலம் பந்தள மன்னர் அரண்மனையில் வாழ்ந்து, பின்னர் அரக்கனை வதம் பண்ணி சாஸ்தாவாக உருவானதாக வரலாறு.

    சாஸ்தாவின் அம்சமாக கருதப்படும் ஐயப்பன் எங்கிருந்தார். அவர் எந்த பகுதியில் திரிந்தார். இளவயதில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள காரையாரில் அவர் வீர விளையாட்டுகளை கற்றதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அங்கு முதன் முதலில் சாஸ்தா கோயில் எழுந்ததாகவும், அக்கோயிலே சொரிமுத்து ஐயனார் கோயில் என்று, அதுவே ஐயப்பனின் மூல ஆதாரம் எனவும் அழைக்கிறார்கள். இக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. சாதி, சமய வேறுபாடின்றி குலம் மற்றும் குடும்பத்தை காக்க அவதரித்த தெய்வமாக இவர்கருதப்படுகிறார்.

    திருவனந்தபுரம் மகாராஜாவுக்கு எதிராக போர் மூண்டபோது அவர்களுக்கு உதவச்சென்ற இடத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் இறந்தார். அதற்கு பரிகாரமாக என்ன வேண்டும் என மகாராஜா கேட்டபோது “சுள்ளி ஒடிக்க கொஞ்சம் காடு வேண்டும்” என்று ஜமீன்தாருடன் சென்றவர்கள் சொன்னார்கள். உடனே மகாராஜா 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை பரிசாக கொடுத்தார். அதில் சொரிமுத்து ஐயனார் கோயிலும் அடங்கும். தற்போது இக்கோயிலை சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான முருகதாஸ் தீர்த்தபதி ராஜா நிர்வகித்து வருகிறார்.

    காரையாரை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சாஸ்தா என்றும், மதுரை, விருதுநகர், திருச்சி, சேலம், தஞ்சை மாவட்டங்களில் ஐயனார் என்றும் பல கோயில்கள் உருவாயின. இங்குள்ள சாஸ்தா, ஐயனார் ராஜாவாகவும், காவல் தெய்வமாக விளங்கும் சங்கிலிபூதத்தார், கருப்பண்ணன், கருப்பன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சேனாதிபதியாகவும் அழைக்கப்படுகின்றனர். சங்கலிபூதத்தார் ஆழி எனவும் அழைக்கப்படுகிறார். சாஸ்தா கோயில் முன்பு இந்த ஆழி மிக பிரமாண்டமாக உருட்டும் விழியுடனும், முறுக்கிய மீசையுடனும் பிரமாண்டமான தோற்றத்துடன் நம்மை பயமுறுத்தும்.

    சாஸ்தா கோயில் எது என்று முன்னோர்கள் தனது வாரிசுதாரர்களுக்கு சொல்லாமல் விட்டதால், தாங்களுக்கு எந்த சாஸ்தா என்றே தெரியாதவர்கள் உலகின் முதல் சாஸ்தாவாக கருதப்படும் காரையார் சொரிமுத்து ஐயனார் கோயிலை மூலசாஸ்தா என்றும், குலதெய்வம் என்றும் கருதி வழிபடுகின்றனர். இங்கு வந்து சென்றாலே குலதெய்வ வழிபாடு பூர்த்தியாகிவிடும் என்பது ஆன்றோர்களில் வாக்கு.

    இங்கு பங்குனி உத்திரதிருவிழா மட்டுமில்லாமல், ஆடி அமாவாசை, தை அமாவாசை திருநாளும் விமர்சையாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்றும், ஆடி அமாவாசையன்றும் லட்சகணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து முகாமிட்டு வழிபடுவர். இதுமட்டுமல்ல திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள், குழந்தைகளுக்கு முடிஎடுத்து காதணி விழா, தொழில் மற்றும் குடும்ப விருத்திக்காக கிடா விருந்து உள்ளிட்ட நேர்த்திகடன் பூஜையும் சாஸ்தாவிற்கு நடத்துகின்றனர்.

    திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு முதல் பத்திரிக்கையும், அழைப்பும் சாஸ்தாவிற்குதான். ஆடிமாதத்தில் அடிக்கும் சாரலில் நனைந்த படி, வாடையில்வாடியே படியே குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பல கிலோ மீட்டர் நடந்து வந்தே சொரிமுத்து ஐயனாரை வணங்கி நிற்போர் பலர். இப்படி சாஸ்தா வழிபாடு தொடர்ந்தது.

    தற்போது நமது குல தெய்வ சாஸ்தா எது என்று கண்டுபிடித்து, அதை எப்படியாவது வணங்க வேண்டும் என்று மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு வந்துள்ளது. எனவே தான் அனைவரும் தங்கள் குலதெய்வமான சாஸ்தாவை தேடி அலைகிறார்கள். பிரசன்னம் பார்க்கிறார்கள். அவர் சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து சாஸ்தாவை கண்டுபிடித்து வணங்குகிறார்கள்.

    சரி கண்டுபிடிக்க முடியவில்லை. விட்டுவிடுவோம் என முடங்கி விடாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள் பலர். அதுவரை அவர்கள் பக்கத்தில் உள்ள சாஸ்தா கோயிலுக்கு சென்று வணங்கி வருவார். தங்களுக்கு ஒத்துக்கொண்டபடி சாஸ்தா கிடைத்து விட்டால் அவரை தேடி ஓடோடி செல்கிறார்கள். அந்த அளவுக்கு குலதெய்வம் மீது ஒரு வகையான ஈர்ப்பு. ஒருவர் குலதெய்வம் யார் என தெரியாமல் நெல்லையப்பர் கோயிலில் உள்ள காவல் தெய்வமான சங்கிலிபூதத்தாரை 25 ஆண்டுகளாக வணங்கி வந்துள்ளார். அவரும் குடும்ப கஷ்டங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகி சிலரிடம் முறையிட, நீங்கள் குலதெய்வத்தை வழிபடுங்கள் என்று கூறியுள்ளனர். சங்கிலிபூதத்தாரை நான் வழிபடுகிறேன் என்று கூற, சங்கிலிபூதத்தார் குலதெய்வம் இல்லை. காவல் தெய்வம் என்று அவர்கள் கூற, அவருக்கும் குலதெய்வம் தெரியவந்தது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா, சேரன்மகா தேவியிலிருந்து களக்காடு செல்லும் வழியில் பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிரான்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, பாளை சாந்திநகர் நடுகாடுடையார் சாஸ்தா, சீவலப்பேரி அருகே மலை உச்சியிலிருக்கும் மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, ஆலங்குளம் ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா, ஏர்வாடி வடுகச்சிமதில் பூலியுடையார் சாஸ்தா, நாங்குநேரி சிறுமளஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா, களக்காடு பெருவுடையார் சாஸ்தா, களக்காடு படலையார்குளம் வென்னியுடையார் சாஸ்தா, பத்தமடை மகாலிங்க சாஸ்தா, நளன்குடி மயிலேறும் சாஸ்தா, பேரூர் நரி சாஸ்தா என ஆயிரத்திற்கும் அதிகமான சாஸ்தா கோயில்கள் அமைந்துள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா, ஆதிச்சநல்லூர் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, மலையரசி தீரன் தம்பிரான் சாஸ்தா, திருச்செந்தூர் அம்மன்புரம் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த ஐயனார், குரும்பூர் தேரிகுடியிருப்பு கற்குவேல் ஐயனார், சாத்தான்குளம் மருதமலை ஐயனார், கடம்பாகுளம் பூலுடையார் சாஸ்தா என ஐநூறுக்கும் மேற்பட்ட சாஸ்தா கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளன. தவிர குமரி, விருதுநகர், மதுரை ஆகிய தென்மாவட்டங்களிலும் பலஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா, ஐயனார் கோயில்கள் உருவாயின.

    இதே போல் பல்வேறு சாஸ்தா வரலாறுகள் பல கூறியபடியே தென் பகுதியில் அருள்பாலித்து வருகின்றன. சிறந்த தமிழ் பெயர்களை சுமந்த வண்ணமாகவும் பல சாஸ்தா காணப்படுகின்றன. இராஜவல்லிபுரத்தில் நல்லதம்பி சாஸ்தா, குலசேகரநத்தத்தில் ஸ்ரீ கரும்புளி சாஸ்தா, முத்தாலங்குறிச்சி பூந்தலை உடையார் சாஸ்தா, பொந்தன்பொழி மருதமுடையார் சாஸ்தா, ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா, இருப்பபுரம் பெரும்படை சாஸ்தா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.
    சாஸ்தாவை வணங்க பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு பக்தர்கள் கடந்த காலங்களில் மாட்டு வண்டி கட்டி செல்வர்.

    அவர்கள் தங்கள் குழந்தைகளோடு வண்டியின் அடிவாரத்தில் தொட்டில் கட்டி பாய் விரித்து படுத்த படியே வானத்தை அன்னாந்து பார்த்து நிற்பர். மேகங்கள் திரளவேண்டும். மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் ஐயனே வேண்டிய வரம்வேண்டும் என சாஸ்தாவை வேண்டி நிற்பர். இரவு முழுவதும் வேடிக்கை பார்த்தபடியே, குழந்தைகளை ராட்டினத்தில் ஆட விட்டு மகிழ்வர். சர்பத், சேவியா பாயசத்தினை கண்ணாடி டம்ளரில் வாங்கி குடிப்பர். வகைவகையாக திண்பண்டங்களை வாங்கி கொடுத்து பெருமை படுவர். பெண் குழந்தைகளை கூட்டிச்சென்று பாசி மணிகள் வாங்கி கொடுத்து வளையல் உள்பட பொருள்களை டிசைன் டிசைனாக மணிக்கணக்கில் பார்த்து தேர்வு செய்வர்.

    இரவு முழுவதும் ஐயப்பன் வில்லுபாட்டை கேட்ட படியே ராத்திரி சாமக்கொடையை ரசித்துக்கொண்டே இருப்பர். சில இடங்களில் வன்னிராஜன் போன்ற காவல் தெய்வங்கள் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அதிகாலை சிலர் காவல்தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி, அதை தங்களது மாட்டு வண்டி கூரையில்போட்ட படி, அங்கு விற்கும் ஏணி மிட்டாய் (சீனி மிட்டாய்), காரச்சேவு, மிக்சர் போன்றவற்றை ஓலைப்பெட்டியில் வாங்கி வந்து உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். எத்தனை ஆனந்தம். குடும்பமே குதுகலிக்கும். பௌர்ணமி வெளிச்சத்தில் அக்கம் பக்கத்தில் வந்த உறவு காரர் கும்பலில் நல்லபெண் மாப்பிள்ளை இருக்கிறார்களா என ஒருஅலசு அலசி விடுவார்கள். பெண் மாப்பிள்ளை பிடித்திருந்தால் திருமணத்துக்கு அச்சாரமும் இட்டு கொள்வார்கள்.

    மொத்தத்தில் சாஸ்தா என்னும் குலதெய்வ வழிபாடு மட்டும் இல்லையென்றால் உறவுகள் மேலும் வலுப்பட மற்றுமொரு திருவிழா கிடைக்குமா? என்பது கூட சந்தேகமே. இந்த விழா என்றும் உறவுகள் மேன்படும் விழாவாக அமையவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாகும்.
    Next Story
    ×