search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரமடையில் நடந்த தேரோட்டத்தில் திரளாக கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    காரமடையில் நடந்த தேரோட்டத்தில் திரளாக கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    காரமடை அரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்

    காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் ஆகும். இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 18-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதைதொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் மணக்கோலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் தேரில் எழுந்தருளினார். இதையொட்டி பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 5.15 மணிக்கு நடந்தது. கோவில் மிராசுதாரர்கள், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், சி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர், நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... ரங்கா... என்று கோஷமிட்டபடி சென்றனர். மேலும் பெரும்பாலான பக்தர்கள் வாழை பழங்களை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் தேர் இரவு 9.10 மணியளவில் தேர்நிலைக்கு வந்தடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, பேரூர் செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் தலைமையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேர் திருவிழாவில் அ.தி.மு.க. 4-வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ரங்கநாதன், மீன் குளத்தி பகவதி அம்மன் பஜனை வழிபாட்டு குழு ஆறுச்சாமி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மனோகரன், இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ராமு, இந்து அறநிலைய துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், செயல் அலுவலர்கள் ஜெயசந்திரன், செல்வராஜ், ராமஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான க.விமலா, செயல் அலுவலர் (பொறுப்பு) லோகநாதன், கோவில் கணக்கர் மகேந்திரன் உள்பட பலர் செய்து இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகன உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா சேஷ வாகன உற்சவமும், 22-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சந்தன சேவையும் நடக்கிறது.

    23-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா முடிவடைகிறது. 
    Next Story
    ×