search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெங்கடாசலபதி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    வெங்கடாசலபதி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கிய போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகும். நாடு முழுவதும் இருந்து திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். முக்கிய நாட்களில் அங்கு 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க கோவிலை போல் நாடு முழுவதும் பல இடங்களில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி டெல்லி குருசேத்திரத்தில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    2-வதாக இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த கோவில் 5½ ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியின் வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் ஆண்டாள் அம்மாள் சன்னதியும், வெங்கடாசலபதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன. வெங்கடாசலபதி 7½ அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளார்.

    கோவிலின் கீழ் பகுதியில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் மற்றும் அன்னதான கூடம், தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டு உள்ளன. திருப்பதியை போன்று, கன்னியாகுமரியில் எழுந்தருளியுள்ள இந்த கோவிலிலும் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் நேற்று காலையில் செம்பு தகடுகள் பதிக்கும் பணி நடந்தது.


    கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலை படத்தில் காணலாம்.

    கும்பாபிஷேக விழா நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர். யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழை தோரணங்கள், பூக்களால் அலங்காரமிட்டு காட்சி அளித்தது.

    இங்கு உற்சவர் வெங்கடாசலபதி, பூதேவி, ஸ்ரீதேவியுடன் ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவர் திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. உற்சவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைக்கு முன்னதாக பல்வேறு பூஜைகள் நடந்தன. அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டது. மேலும் யாகசாலை பூஜையின் தொடக்கமாக வெங்கடாசலபதி கோவில் முழுவதும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.

    யாகசாலை பூஜையில் தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவி பாபு, ஸ்ரீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, கன்னியாகுமரி திருப்பதி கோவிலின் உதவி செயல்அலுவலர் ரவி, உதவி பொறியாளர் அமர்நாத், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி போன்றவையும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற நாட்களில் கேசரா திவ்சம், ஹோமம், பூர்ணாகுதி, ஜலாதி வாசம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×