search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்
    X

    கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்

    சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார்.
    சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம்.

    சோளிங்கர் மலையில் சப்தரிஷிகளும் தவம் செய்து ஸ்ரீ யோக நரசிம்மரின் காட்சியைப் பெற்றனர். அப்படி சப்தரிஷிகள் அருள் பெற்றது போல பக்தர்களும் அருள்பெறவே கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்த்து அருள்கிறார் என்று சொல்கிறார்கள்.

    அது எப்படி சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கார்த்திகை மாதம் மட்டும் எல்லா ஊர்களிலும் நரசிம்மருக்கு தைலக்காப்பு செய்து வைப்பார்கள். ஆனால் சோளிங்கர் தலத்தில் மட்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதில்லை. இதன்மூலம் இத்தலத்தில் நரசிம்மர் கண்திறந்து இருக்கிறார்.

    இது எந்த தலத்துக்கும் கிடைக்காத பெரும் பேறு. எனவே கார்த்திகை மாதம் ஏதாவது ஒருநாள் சோளிங்கர் வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் அவரது நேரடி பார்வையை பெற்ற புண்ணியத்தை அனுபவிக்கலாம். 12 மாதங்களில் ஒரே ஒரு மாதம் மட்டும் நரசிம்மர் இப்படி அருள்கிறார். எனவே பக்தர்கள் இந்த கார்த்திகை மாதத்தில் திட்டமிட்டு தங்களது புனித யாத்திரையை அமைத்துக் கொண்டால் சிறப்பான அனுபவத்தை பெறலாம்.

    இவ்வாறு சோளிங்கர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

    கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்ப்பதால் அவரை தரிசனம் செய்ய வைணவர்கள் மட்டுமின்றி அனைத்து பிரிவினரும் கோவில்களுக்கு வரத்தயங்குவது இல்லை. இதனால் கார்த்திகை மாதம் முழுவதும் சோளிங்கர் தலத்தில் பக்தர்கள் வெள்ளமென படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக கார்த்திகை மாதம் 5 வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சோளிங்கருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுகிறது. நரசிம்மர் கண்திறந்து இருப்பதை நம் கண் குளிரப் பார்த்து தரிசித்துவிட வேண்டும் என்று பக்தர்கள் படையெடுத்து வருகிறார்கள்.

    பெரியமலை கோவிலில் ஒரே நேரத்தில் சில நூறுபேர் தான் இருக்க முடியும். இதனால் பக்தர்களின் வரிசை நாம் நடந்து செல்லும் மலை படிக்கட்டு வரை வந்து விடுகிறது.

    பெரிய மலைக்கு செல்ல மொத்தம் 1305 படிக்கட்டுகள் உள்ளன. இதில் 650-வது படிக்கட்டுகளிலேயே பக்தர்கள் வரிசை தொடங்கிவிடுமாம். அதாவது பாதி மலையிலேயே பக்தர்கள் வரிசை தொடங்கி விடுகிறது. எனவே கார்த்திகை மாதம் உங்கள் வசதிக்கு ஏற்ற நாளில் திட்டமிட்டு சோளிங்கர் சென்று வந்தால் நரசிம்மர் கண்திறந்து அருள்வதை கண்குளிர தரிசித்து வரலாம்.
    Next Story
    ×