search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புராண கதாபாத்திரங்கள்
    X

    புராண கதாபாத்திரங்கள்

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    மாபலி சக்கரவர்த்தி

    அசுரர்களின் அரசன் மாபலி. இந்த மன்னன், நாராயணரையே எப்போதும் நினைத்து வழிபட்டு வந்த பிரகலாதனின் பேரன் ஆவார். மாவலி சக்கரவர்த்தி தன்னுடைய வலிமையால், மூன்று உலகங்களையும் ஆட்சி செய்து வந்தார்.

    வளர்ந்து கொண்டே சென்ற மாபலியின் வலிமையால், தனது இந்திர பதவிக்கு ஆபத்து வரலாம் என்று தேவேந்திரன் அச்சம் கொண்டான். அவனது அச்சத்தைப் போக்குவதுடன், மாபலிக்கும் அனுக்கிரகம் செய்ய நினைத்த மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தார். பின்னர் மாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார்.

    அதற்கு மாபலி சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டதும், விஸ்வரூபம் எடுத்து முதல் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் வானத்தையும் அளந்தார். ‘மூன்றாம் அடியை எங்கு வைப்பது?’ என்று வாமனர் கேட்க, தன் தலையில் வைக்கும்படி மாபலி கூறினார். மூன்றாவது அடியை மாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்த வாமனர், அவரை பாதாள உலகத்தில் தள்ளினார்.

    ஒற்றைக் கொம்பன்

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    யானையின் முக வடிவத்தைப் பெற்றவர் விநாயகப் பெருமான். அந்த யானை முகத்தில் ஒற்றைத் தந்தம் முறிந்த நிலையில் இருக்கும் விநாயகரை ‘ஒற்றைக் கொம்பன்’ என்று அழைக்கிறார்கள். விநாயகரின் ஒன்றை தந்தம் முறிந்த நிலையில் இருப்பதற்கு, மகாபாரத இதிகாசம் ஒரு கதையைச் சொல்கிறது. மகாபாரத பெருங்காப்பியத்தை எழுத வியாசர் முடிவு செய்தார். தான் சொல்லச் சொல்ல விரைந்து எழுதுவதற்கு விநாயகப் பெருமானை, வியாசர் தேர்வு செய்தார். வியாசர் மகாபாரதத்தின் கதையைச் சொல்லச் செல்ல, மயில் இறகு கொண்டு விநாயகப் பெருமான் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மயில் இறகு முறிந்து போக, எழுதும் பணி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய தந்தத்தில் ஒன்றை முறித்து தொடர்ந்து எழுதினார், விநாயகர். இதனால் தான் அவர் ‘ஒற்றைக் கொம்பன்’ என்று போற்றப்படுகிறார்.

    சித்ர குப்தர்

    ஒரு மனிதனின் பாவ- புண்ணியங்களின் படி, அவரது விதியை முடிவு செய்பவர் எமதர்மன். அவரது உதவியாளர் தான் சித்ரகுப்தர். இவர்தான் ஒரு மனிதன் செய்யும் பாவ- புண்ணியங்களை கணக்கெடுத்து, அதை எமதர்மனிடம் சொல்பவர். சிவபெருமான் வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியவர் என்பதால் இவரை ‘சித்ர குப்தர்’ என்று போற்றுகின்றனர். இவர் பிறக்கும் போதே, கணக்கெடுப்பதற்காக ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணியுடன் பிறந்தார் என்று புராணக் கதை சொல்கிறது. ஒருவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு நன்மைகள் தரும் பலன்களையும், தீமைகளுக்கு தண்டனைகளையும் எமதர்மன் வழங்குவார். எனவே சித்ர குப்தரை வணங்கி வழிபட்டால், நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகமாக உள்ளது.

    சாயா

    சூரியனின் மனைவி தான் இந்த சாயா தேவி. சூரியனின் முதல் மனைவி சஞ்சனாவால், சூரியனின் தீவிரமான ஒளியைத் தாங்க முடியவில்லை. அதனால் தனது மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்று விட்டாள். அப்படி அவள் செல்லும் போது, தனது நிழலை சூரியலோகத்திலேயே விட்டுச் சென்றாள். அந்த நிழல் உருவமே ‘சாயா தேவி’. நிழல் என்றாலும் சாயாதேவியும் சஞ்சனாவைப் போன்ற உருவத்திலேயே இருந்தாள். இதனால் சஞ்சனா இல்லாததை சூரியனால் அறிய முடியவில்லை. சூரியனுக்கும் சஞ்சனாவின் நிழல் உருவமான சாயவுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகே சாயா உண்மையை சூரியனிடம் கூறினாள். சூரியன் சஞ்சனாவை மீண்டும் அழைத்து வரக் கூறினார்.

    துச்சாதனன்

    திருதிராஸ்டிரர்- காந்தாரி தம்பதியரின் நூறு புதல்வர்களின் ஒருவன் தான் இந்த துச்சாதனன். கவுரவர்களில் துரியோதனனுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்டவன். மகாபாரதப் போருக்கு மிக முக்கிய காரணம், அரசவையின் முன்பு திரவுபதி அவமதிக்கப்பட்டதுதான். அந்த அவமதிப்பை துரியோதனனின் உத்தரவுப்படி நிறைவேற்றியவன் துச்சாதனன். சூதாட்டத்தில் கவுரவர்களிடம் நாட்டையும், மனைவி திரவுபதியையும் கூட இழந்து விட்டனர் பாண்டவர்கள். இதையடுத்து திரவுபதியை அரசவைக்கு இழுத்து வந்து, துகிலுரியச் சொன்னான் துரியோதனன். அண்ணனின் உத்தரவுப்படி திரவுபதியை அரசவைக்கு இழுத்து வந்ததோடு, அவளது சேலையை துகிலுரிய முற்பட்டவன் துச்சாதனன். குருசேத்திரப் போரில் பீமனால், இவன் கொல்லப்பட்டான். 
    Next Story
    ×