search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீர்த்தத்திற்கு முருகப்பெருமானின் தங்க வேல் பல்லக்கில் கொண்டு செல்லப்பட்ட காட்சி
    X
    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீர்த்தத்திற்கு முருகப்பெருமானின் தங்க வேல் பல்லக்கில் கொண்டு செல்லப்பட்ட காட்சி

    திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா

    திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் காசிக்கு நிகரான என்றென்றும் வற்றாத கங்கை தீர்த்தக்குளம் (சுனை) உள்ளது. இதை தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு பாறை பிளந்து உருவாக்கியதாக புராணம் கூறுகிறது.

    இத்தகைய வேலின் மகிமையை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் இருந்து மலை உச்சியில் உள்ள மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா புராண வரலாறு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டிற்கான வேல் எடுக்கும் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் தயாராக இருந்த பல்லக்கில் வேல் வைக்கப்பட்டது. இதனையடுத்து கோவிலில் இருந்து பல்லக்கில் இருந்தபடியே வேல் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மலையில் உள்ள மலைமேல் குமரர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு காசிக்கு நிகரான கங்கை தீர்த்தக்குளத்தில் தங்கவேலுக்கு புனித தீர்த்த மகா அபிஷேகம் நடந்தது. மேலும் வேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. அப்போது திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதனையடுத்து மலைமேல் குமரருக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீப, தூப ஆராதனையும் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து மலையை விட்டு வேல் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பிறகு பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகர் வலம் வந்து கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

    திருப்பரங்குன்றத்தில் 7 கண்மாய் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் வேல் எடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மலையிலேயே காய்கனிகளுடன் சாதம் படைத்து, அதில் குழம்பை சேர்த்து கதம்ப சாதம்(கூட்டாஞ் சோறு) தயார் செய்தனர். பின்னா அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையானது மலையை குடைந்து அமைந்துள்ளது. எனவே இங்கு சாமிக்கு அபிஷேகம் கிடையாது. அதே சமயம் சாமியின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடந்து வருகிறது. இதன்மூலம் இங்கு வேல் மகிமை பெறுகிறது. நேற்று மலைக்கு வேல் சென்றதால் கோவிலுக்குள் எந்த அபிஷேகமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×