search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாடலீசுவரர் கோவிலில் விளக்கு ஏற்ற பக்தர்களுக்கு தடை
    X

    பாடலீசுவரர் கோவிலில் விளக்கு ஏற்ற பக்தர்களுக்கு தடை

    கடலூர் பாடலீசுவரர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி சன்னதிகளிலும், பிரகாரங்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பாடலீசுவரர் கோவில் பிரகாரங் களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை அதற்கென வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் ஊற்றிச்செல்லலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இது பற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் பிரகாரங்களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே விளக்கு ஏற்றி வழிபட விரும்பும் பக்தர்கள், பாடலீசுவரர் சன்னதியின் சங்கு மண்டபத்தில் உள்ள சூரிய விளக்கிலோ அல்லது அம்மன் சன்னதியின் கொலு மண்டபத்தில் உள்ள சந்திர விளக்கிலோ, தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். விளக்கில் எண்ணெய் அதிகமாக இருந்தால், அதன் அருகில் பாத்திரங்களை வைத்துள்ளோம். அதில் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து பாடலீசுவரர் கோவில் முன்பு உள்ள கடைகளில் அகல் விளக்கு விற்பனையும் நேற்று நிறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் 1,252 கோவில்களில்...

    இந்த தடை உத்தரவு பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடாந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட கோவில்களுக்குள் நெய்விளக்கு, அகல் விளக்கு, எலுமிச்சை விளக்கு, தேங்காய் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக கோவிலுக்குள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள விளக்கில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபடலாம் என்றார்.

    இந்த உத்தரவு மாவட்டத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட 1,252 கோவில்களிலும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையே அறநிலையத்துறையின் உத்தரவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    சாமி சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபடக்கூடாது என்று பக்தர்களுக்கு தடை விதிப்பது சரியல்ல. நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக கோவில்களில் விளக்கு ஏற்றித்தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் தீ விபத்து ஏற்படவா செய்தது? அப்படியே தீவிபத்து ஏற்பட்டிருந்தாலும் விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே. எனவே பாரம்பரிய வழக்கத்துக்கு மாறாக அரசு உத்தரவிடக்கூடாது. தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேறு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அதனை செய்யாமல் பாரம்பரியத்தை மாற்றும் நடைமுறையை திணிக்க அரசு முயற்சிக்கக்கூடாது. எனவே அறநிலையத்துறையின் உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×