search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    தேவசகாயம்
    X
    தேவசகாயம்

    மறைசாட்சி தேவசகாயத்துக்கு 15-ந்தேதி புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குகிறார்

    ரோமில் வருகிற 15-ந்தேதி மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குகிறார் என கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தெரிவித்தார்.
    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை  நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மண் பேறுபெற்றதாகும். இந்த மண்ணில் பிறந்த ஆன்றோர்கள் பலர் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளார்கள். நலவாழ்வுக்குத் தமிழ் மருத்துவம் தந்த அகத்தியமுனி, செவ்விய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், நான்மறையால் நானில மக்களுக்குப் பொய்மொழி பகர்ந்த அய்யன் திருவள்ளுவர், நெறிகள் கூறும் வெண்பாக்களால் வாழும் கலை சொன்ன முதலாம் அவ்வையார், அன்னியனை எதிர்த்து நின்று போராடிய மாவீரன் வேலுத்தம்பி தளவாய், சாதிக் கொடுமையை எதிர்த்து மனிதமே தெய்வம் எனச் சொல்லி அய்யா வழி தந்த வைகுண்டர், அல்லாவின் நெறி தன்னை எல்லார்க்கும் சொன்ன செய்குத் தம்பி பாவலர், தம் சிரிப்பு நடிப்பால் சிந்தனைக்கு வளம் தந்த என்.எஸ். கிருஷ்ணன், தொழிலாளர் உரிமையே நாட்டுக்கு உண்மைச் சுதந்திரம் என்று முழங்கிய ஜீவா என்ற ஜீவானந்தம், முக்கடல் சூழ்ந்த குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி வெற்றியும் கண்ட மார்ஷல் நேசமணி.

    இப்படி எண்ணற்ற பெரியோரில் இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார் மறைசாட்சி தேவசகாயம்.கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். கொரோனா பெருந்தொற்று காரணமாக புனிதர் பட்ட விழாவுக்கான நாள் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு ரோமில் வருகிற 15-ந் தேதி போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட விழா நடக்கிறது.

    இதையொட்டி அதற்கு முந்தைய நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் நன்றி ஆராதனையும், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டமும் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் காலை 7 மணிக்கு புனிதர் பட்ட விழா நிகழ்வுகள் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் மூலமாக 495 பேர் ரோமுக்கு செல்கிறார்கள். இதுதவிர தனியாகவும் பலர் செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி, கர்தினால்கள் அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான ஆஸ்வால்டு கிராசியஸ், சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் கிளீமிஸ் ஆகியோரும், கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் சார்பில் நாங்களும் கலந்து கொள்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த 50 அல்லது 60 பேராயர்கள், ஆயர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மத்திய அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பார்லா கலந்து கொள்கிறார். இந்த புனிதர் பட்ட நிகழ்வையொட்டி கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் 12, 13, 14-ந் தேதிகளில் சிறப்பு வழிபாடு, சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.

    புனிதர் பட்டம் பெறும் மறைசாட்சி தேவசகாயம், தமிழகத்தின் முதல் புனிதர் ஆவார். இந்தியாவின் முதல் இல்லறப் புனிதர் என்னும் நிலையை நம்முள் ஒருவர் அடைந்துள்ள நிகழ்வைக் கொண்டாடும் வண்ணமும், மாபெரும் புனிதர் தேவசகாயத்தின் “நம்பிக்கையில் உறுதி, வாழ்வுமறையில் சமத்துவம்” என்னும் செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடையவும் அகில இந்திய அளவில் மாபெரும் விழா கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் நடைபெற இருக்கிறது.

    இந்த விழா அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு ஆன்றோர்கள் வரவேற்கப்படுவார்கள். 5 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு இந்த விழா மற்றும் திருப்பலி நிறைவு பெறும்.

    இதற்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமை தாங்குகிறார். கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியஸ், ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா- டாமன் பேராயரும், கிழக்கிந்திய திருச்சபையின் பெருந்தந்தையுமான பிலிப்நேரி பெர்றாவோ, தமிழக ஆயர் பேரவை தலைவரும், சென்னை- மயிலை பேராயருமான ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, கோட்டார் மறைமாவட்ட ஆயரான நான் (நசரேன்சூசை), தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மற்றும் இந்திய திருச்சபையின் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பலசமய தலைவர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விழாவுக்காக காற்றாடிமலை அருகில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. 1 லட்சம் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காற்றாடி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு

    இவ்வாறு ஆயர் நசரேன் சூசை கூறினார்.

    பேட்டியின்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரத்தினம், விழா ஒருங்கிணைப்பாளர் ஜான் குழந்தை, குழித்துறை மறைமாவட்ட வரவேற்புக்குழு தலைவர் மரிய வின்சென்ட், கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிளாரியஸ், மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அலோசியஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையும் படிக்கலாம்...அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்
    Next Story
    ×