என் மலர்
ஆன்மிகம்

கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா
“இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்படைந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வர்” என்பதே நற்செய்தியின் மையக்கருத்தாக உள்ளது.
மனித குலத்தின் முதல் பெற்றோரான ஆதாம், ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகவே சாவு உலகில் நுழைந்ததாக கிறிஸ்தவர்களின் வேதமான பைபிள் கூறுகிறது. கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டதால் முதல் பெற்றோர் தங்கள் மீது சாவை வருவித்துக் கொண்டதாக காண்கிறோம். பைபிளின் தொடக்கத்தில் காணப்படும் இந்த கதை, கடவுளின் வார்த்தையைப் புறக்கணித்து மனிதர்கள் பாவம் செய்ததாலேயே சாவும் துன்பமும் உலகில் நுழைந்தன என்ற கருத்தை வலியுறுத்த உருவகமாக கூறப்பட்டது என்று கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
அழகிய தோட்டம் போன்ற உலகில் மனிதர்களை படைத்த கடவுள், தமது படைப்புகள் மீது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தை அவர்களுக்கு அளித்தார். ஆனால், அவர்களின் அதிகாரம் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருந்ததை மனிதர்களால் ஏற்க முடியவில்லை. இயற்கை அனைத்தின் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சித்த மனிதர்கள், மனச்சான்றில் ஒலித்த கடவுளின் வார்த்தையை புறக்கணித்து தங்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பாவம் உலகில் நுழைந்தது. கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படியாத மனிதர்களின் இந்த செயலையே, ஆதாம் ஏவாள் கதையாக பைபிள் எடுத்துரைக்கிறது.
மனிதர்கள் பாவம் செய்ய காரணமாக இருந்தது சாத்தானின் தூண்டுதலே என்ற கருத்தையும், ஆதாம் ஏவாள் கதையில் காண்கிறோம். ஆகவே, சாத்தானை வென்று மக்கள் அனைவரையும் தம்மிடம் கொண்டு வரும் ஒரு மீட்பரை உலகிற்கு அனுப்ப கடவுள் திட்டமிடுகிறார். கடவுள் சாத்தானையும் பெண்ணையும் நோக்கி, “உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்”என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு, பெண்ணின் வித்தாக பிறக்க இருந்த உலக மீட்பர் குறித்த வாக்குறுதியை கடவுள் வழங்கியதாகவும் பைபிள் கூறுகிறது.
மனிதகுல மீட்பரின் பிறப்புக் காக, கடவுளிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஆபிரகாம் என்ற மனிதரை கடவுள் தேர்ந்தெடுத்தார். முதுமையிலும் குழந்தைப் பேறின்றி இருந்த ஆபிரகாமிடம், “அனைத்து இனத்தவரும் உன் வழி மரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்” என்ற வாக்குறுதியை கடவுள் வழங்கினார். இந்த வாக்குறுதியின் மகனாக பிறந்த ஈசாக்கிடம் இருந்தே, இஸ்ரயேல் மக்கள் தோன்றினர். இஸ்ரயேலர் நடுவே தோன்றிய இறைவாக்கினர்கள், உலக மீட்பரின் வருகைக்காக அவர்களை தயார் செய்தனர்.
கி.மு.8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்கினர் மீக்கா, “இஸ்ரயேலை ஆயராக ஆளும் மீட்பர் பெத்லகேமில் தோன்றுவார்” என்ற முன்னறிவிப்பை வழங்கினார். அதே காலத்தைச் சேர்ந்த இறைவாக்கினர் எசாயா, “உலக மீட்பராக தோன்ற இருப்பவர் கடவுளே” என்ற உண்மையை பறைசாற்றினார். மீட்பரின் பணி வாழ்வு, அவரது துன்பங்கள் குறித்த செய்திகளையும் இறைவாக்கினர்கள் எடுத்துரைத்தனர். ஆனால் பல்வேறு சமகால சூழ்நிலைகளால், மீட்பர் குறித்த இறைவாக்குகளை இஸ்ரயேல் மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
உலக மீட்புக்காக கடவுள் குறித்த காலம் நெருங்கியதும், நாசரேத்தில் வாழ்ந்த கன்னி மரியாவின் மகனாகப் பிறக்க மகனாகிய கடவுள் விரும்பினார். இந்த செய்தியுடன் வந்த வானதூதரின் வார்த்தைகளுக்கு மரியா ஒப்புதல் அளித்ததால், கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறுவதற்கான வழி திறக்கப்பட்டது. இறைமகன் இயேசு, கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதரானார். அவரது வருகையால் இந்த உலகம் மீட்பை பெற்றுக் கொண்டது.
மகனாகிய கடவுளை, ‘வார்த்தை’ என்ற பெயராலும் பைபிள் அழைக்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குறிப்பிடும் திருத்தூதர் யோவான், “தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த வார்த்தையானவர், மனித உடலெடுத்து நம்மிடையே குடிகொண்டார்” என்கிறார். “இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்படைந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வர்” என்பதே நற்செய்தியின் மையக்கருத்தாக உள்ளது. ஏனெனில், கடவுளின் வார்த்தையைப் புறக்கணித்ததால் பாவம் செய்து சாவுக்கு உட்பட்ட மனித குலம், அவரது வார்த்தையாகிய இறைமகனை நம்புவதால் வாழ்வுக்குரிய மீட்பை பெற்றுக்கொள்வது உறுதி.
மானிடரின் மீட்புக்காக கடவுளே குழந்தையாய் பிறந்தார் என்பது நம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா! ஆகவேதான், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா உலக மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் நற்செய்தியாக அமைந்துள்ளது. “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்ற வானதூதர்களின் வாழ்த்து, கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் மீட்பின் மகிழ்ச்சியை வழங்கட்டும்!
டே. ஆக்னல் ஜோஸ்.
Next Story






