search icon
என் மலர்tooltip icon

    திருப்பாவை

    “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்” என்று தொடங்கும் திருப்பாவை பாடலையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
    பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    விளக்கம்: ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் பரமனுடைய, பர, வ்யூக, விபவ, நாம, நித்ய-லீலா விபூதி விசேஷங்களை சொல்லி பாடினாள். அடுத்த படியாக அர்ச்சையையும் பாகவத விசேஷங்களையும் சொல்ல வருகிறாள். இன்றைய பாசுரத்தில், பாகவதர்களுடன் புதிதாக சேர்ந்துகொண்ட சிறுமி ஒருத்தியை விடியலின் அடையாளங்களைச் சொல்லி, எழுப்புகிறாள். இவ்வழகிய காலைப்பொழுதில், பறவைகள் எழுப்பும் கீச் கீச் என்ற இனிய சப்தமும், கருடனுக்குத் தலைவனான நம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் வெண்சங்குகள் ஊதுவதால் எழும் இனிய பேரொலியும் உன் செவியில் விழவில்லையா ? அனுபவம் குறைந்த பெண்ணே, விரைவாக உறக்கம் கலைத்து எழுந்திரு ! 

    பூதகி என்ற கொடிய அரக்கியின் முலையில் நச்சுப் பாலை உண்டு அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவெடுத்து வந்த சகடாசுரன் என்ற மாய அரக்கனை உதைத்து அழிக்க தன் திருவடியை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் நாகப் பஞ்சணையில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஏழு உலகங்களிலும் உள்ள அசையும், அசையா, உயிருள்ள மற்றும் ஜடப் பொருள்களில் ஆதிமூலமாக உறைந்திருப்பவனும், அவதாரங்களுக்கு காரணனும் ஆன அப்பரந்தாமனை,பெரும்பக்திமான்களான முனிவர்களும் யோகிகளும் தங்கள் சிந்தையில் நிறுத்தி செய்த தியானத்தை மெல்லக் கலைத்து, சிறிதும் பதட்டமின்றி அரி நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டாகும் பேரோசை நம் உள்ளம் புகுந்து நம்மைக் குளிர (பேருவகை கொள்ள) வைக்கிறது ! பாவை நோன்பிருந்து, அம்மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் ! என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
    ஆயர் குலத்தினில் தோன்றும்
    அணிவிளக்கை
    தாயைக் குடல்விளக்கும் செய்த
    தாமோதரனை,
    தூயோமாய் வந்துநாம் தூமலர்
    தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசுஆகும் செப்பேலோ
    ரெம்பாவாய்!


    விளக்கம்:

    வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் தாமோதரனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

    ஆழி மழைக்கண்ணா! என்று பர்ஜன்ய தேவனை அழைக்கிறாள் ஆண்டாள். பர்ஜன்யனான வருணன் மட்டுமே உலகம் உய்ய நீரைத்தருகிறான். நீரின்றி அமையாது உலகு அல்லவா? இந்த பர்ஜன்ய தேவன் நாரணனைப்போலே, படைத்தல் - அழித்தல் தொழில்களை விட்டு ரக்ஷிக்கும் தொழிலை கைக்கொண்டிருக்கிறான் என்று ஒற்றுமை சொல்லி நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள். ஆழ்கடலினுள்ளேயே புகுந்து உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணிரை எடுத்துக்கொண்டு ஊழி முதல்வனான எங்களின் நாராயணின் உடல் போல மெய் கருத்து, பாற்கடலில் துயிலும் பத்மநாபனின் திருத்தோள்களில் உள்ள சுதர்சனாழ்வான் மின்னுவது போலே மின்னலை ஏற்படுத்திக்கொண்டு, அந்த பத்மநாபனின் சங்கொலிபோல் நின்று அதிர்ந்து இடி இடித்து, அவனது சார்ங்கம் எனும் வில் எப்படி சரமழையை பொழிந்ததோ அப்படி தயங்காமல் பொழிந்து நாங்கள் சுபிக்ஷத்துடன் வாழ பெய்திடாய் அதை எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
    ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்!

    பொருள்: வாமனன் ரூபத்தில் தனது ஓரடியால் உலகத்தை அளந்த அந்த திருமாலின் பெயரைச் சொல்லி நாம் புகழ் பாடுவோம். அப்படிப் பாடுவதால் நமக்குக் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா... மாதம் மும்மாரி மழை பெய்யும். செந்நெல் வயல்களில் பயிர்கள் வளரும், அதன் ஊடாக மீன்கள் துள்ளித் திரியும். நீர் நிலைகளில் குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அதன் மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும், வள்ளல் பசுக்களோ தங்கள் மடியிலிருந்து பாலை அருவியாகப் பொழியும். என்றும் நீங்காத செல்வம் நமக்குக் கிடைத்திடும் பெண்ணே.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
    செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஒதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

    இந்த உலகில் வாழ்பவர்களே! நாம் நம்முடைய பாவை நோன்புக்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகளைக் கேளுங்கள். திருப்பாற்கடலிலே துயில்கின்ற பரந்தாமனின் திருவடிகளை துதிப்போம். நெய்யும், பாலும் அருந்த மாட்டோம். விடியற் காலையிலேயே குளிப்போம். கண்களுக்கு அழகு சேர்க்கும் மையிட்டுக் கொள்ள மாட்டோம். கூந்தலில் பூச்சூடிக் கொள்ள மாட்டோம். செய்யக்கூடாத செயல்களை செய்ய மாட்டோம். யாரிடமும் சென்று கோள் சொல்ல மாட்டோம். யோகியருக்கும், தவசியருக்கும் நாமாக சென்று தர்மம் செய்வதும், சன்யாசிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் அவர்கள் வீடு தேடி வரும் போது இயன்ற அளவு பிச்சையும் அளிப்போம். விருப்பத்துடன் இந்த செயல்களை செய்து கடைத்தேறும் வழியை நினைத்து மகிழ்வடைவோம்.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 1
    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
    கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

    பாடல் விளக்கம்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் 
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் 
    பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ 
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது 
    இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா 
    எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு 
    உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம் 
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்: அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. 

    இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை. காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.

    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப் 
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் 
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு 
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது 
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் 
    சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே 
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    பொருள்: இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் 
    பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் 
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே 
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் 
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு 
    மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் 
    கூட இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்: நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கண்ணபிரான், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும். அதற்கு அந்த சிறுமிகள் நாங்கள் நோன்பு முடிந்ததைக் கொண்டாடும்போது தங்களுக்கு வேண்டுவது என்னென்ன என்று இந்த பாடலில் கூறுகின்றார்கள். 

    பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும். ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். 

    மேலும் நீ அணிந்த ஆடைகள் புனைந்து, பால் சோற்றினை முற்றிலும் மூடுமாறு நெய்யினால் அதனை மறைத்து, அந்த பால் சோற்றினில் உள்ள நெய் எங்களது முழங்கைக் வழியாக வழிந்து ஓடுமாறு சோற்றினை எங்களது கையினில் ஏந்தி, உன்னுடன் கலந்து நாங்கள் உண்போம். அவ்வாறு உண்ட பின்னர், எங்களது உள்ளம் குளிரும் வகையில் உன்னுடன் கூடி இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்வோம் என்று பாடுகின்றனர் ஆயர்பாடி இளம்பெண்கள்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் 
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே 
    போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே 
    சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே 
    கோல விளக்கே கொடியே விதானமே 
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

    பொருள்: காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    பொருள் : தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.

    அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. வருத்தம் நீங்கி, உனது குண நலன்களைப் பாடி மகிழ்வோம்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி 
    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி 
    கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
    கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி 
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி 
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் 
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

    பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.

    கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
    ×