என் மலர்

  கோவில்கள்

  தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயம்
  X

  தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.
  • ஆண்டு தோறும் சித்திரை 1-ந்தேதி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

  தென் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

  கேரளாவின் கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவருக்கு ஒரே கல்லில் ஆன 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

  ஆலயத்தின் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூப கோலத்தில் மகா கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

  ஆலய வளாகத்தில் மங்கலம் தரும் சனீஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, வீரணார், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் உள்ள மங்கலம் தரும் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.

  இவ்வாலயம் சாஸ்திரப்படி இயற்கையாகவே இடுகாடு, சுடுகாட்டுக்கு எதிரில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும். இங்குள்ள பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.

  ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும். அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது ஐதீகமாகும்.

  இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும். ஞாயிற்றுக் கிழமை தோறும் கால பைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

  மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். மகா பிரத்தியங்கிரா தேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும். கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

  மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1-ந் தேதி அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

  உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய், நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது. இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

  தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கோரம்பள்ளம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்குச் செல்ல தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், கோரம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ, கார், மினி பஸ், வசதி உள்ளது.

  Next Story
  ×