search icon
என் மலர்tooltip icon

  கோவில்கள்

  அற்புதங்கள் நிகழ்த்தும் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம்
  X

  அற்புதங்கள் நிகழ்த்தும் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம்

  • தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 120 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது

  கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்தவரை, ஆண்டவர் ஏசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் ஏசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே 3 இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் 2-வது ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், 3-வது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.

  பிரான்ஸ் நாட்டில் 130 ஆண்டுகளுக்கு முன் மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர் 9 நாட்கள் விரதம் இருந்து ஆண்டவரான ஏசுவை மனம் உருகி வழிபட்டால் நோய் தீரும் என கூறினர். இதையடுத்து அன்னாள் அவ்வாறு விரதமிருந்து வழிபட தொடங்கினார். இதையடுத்து 5-வது நாள் அன்று அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்து மறுநாள் மருத்துவரிடம் சென்று காண்பித்த போது இதய நோய் குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

  தொடர்ந்து நாளடைவில் அவரது இருதய நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக அந்த மருத்துவர் கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தார். அப்போதுதான் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பங்கு தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்டிணன்ட் செல் என்பவர் அங்கு ஒரு தேவலாயம் ஒன்றை அமைப்பதற்காக தேவையான பொருள் ஏற்பாடு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவலறிந்த அன்னாள், அங்கு ஆலயம் அமைப்பதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அந்த ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது என்றும், ஆண்டவரை எப்படி உருவாக்குவது என்றும் ஆலோசித்தனர்.

  இந்நிலையில் மார்க்ரேட் மேரி என்பவர் 1673-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் கனவில் ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார் என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் ஏசுகிறிஸ்து. கனவில் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே ஏசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான திரு இருதய ஆண்டவர் உருவம் இங்கு உருவாக்கப்பட்டது.

  மேலும் புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டிணன்ட் செல் இடைக்காட்டூர் வந்து ஆலயம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கினார். இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக் கலையின் அடிப்படையில் சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளது. 120ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது. தற்போது இந்த ஆலயத்திற்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×