search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தான கோபால கிருஷ்ணன்
    X
    சந்தான கோபால கிருஷ்ணன்

    ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோவில்- ராமநாதபுரம்

    இந்த கோவில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடபுறத்தில் அழகன்குளம் கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க அழகன்குளம் கிராமம். இந்த கிராமம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சங்ககாலம் கடந்து கி.மு. 3-ம் நூற்றாண்டினை சேர்ந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு தேவிபட்டினம், ராமேசுவரம் செல்லும் வழயில் கடலும்-வைகை ஆறும் சங்கமிக்கும் ஆற்றங்கரை சாலையில் அழகன்குளம் பஸ்நிறுத்தம் அருகில் அருள்பாலித்துக்கொண்டு உள்ளது ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில்.

    இந்த கோவிலின் பிரகாரம் 2007-ம் ஆண்டு கோவில் அறங்காவலர்களால் புனரமைக்கப்பட்டு இந்தியாவின் தலைசிறந்த ஸ்தபதிகளில் ஒருவரும், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு இல்லம், சென்னை வள்ளுவர் கோட்டம் மட்டுமல்லாது திருமலை திருப்பதியின் ஆஸ்தான ஸ்பதி மறைந்த எஸ்.கே. ஆச்சாரி கலைநயத்துடன் இந்த கோவிலை வடிவமைத்துள்ளார். இங்கு பெருமாள், ஆண்டாள், ஸ்ரீவிஷ்வக்சேனர், காலிங்க நர்த்தனர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறங்காவலர்கள் சார்பில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியில் பெருமாள், கள்ளழகர் வேடம் அணிந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருள்வார்.

    அப்போது கருட வாகனத்தில் சாமி வீதிஉலா வரும் அழகை காண கோடி கண்கள் போதாது. இதுமட்டுமல்லாது மகர்நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்றவையும் பெருமாளின் ரோகினி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் சிறப்பாக நடைபெறும். இங்கு திருமணம் மற்றும் குழந்தைபேறுக்காக பெருமாளை வணங்கி பலர் பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவிலின் திருவிழா காலங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தகோடிகள் இங்கு வந்து சாமிதரிசனம் செய்வார்கள். இந்த கோவில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடபுறத்தில் அழகன்குளம் கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அறங்காவலர்களாக வாசுகிஸ்ரீதரன், கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைகளை பெற்று கோவிலின் வளர்ச்சியை ஆண்டுதோறும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என சொல்லும் கருத்துக்கு ஏற்ப திருவிழா காலங்களில் சுவையான சைவ உணவுகளை சமைத்து பலவகை காய்கறிகளுடன் பாயசமும் கூடிய உணவு வழங்கி வருகின்றனர்.
    Next Story
    ×