search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில்
    X
    கூவாகம் கூத்தாண்டவர் கோவில்

    குறைகளை நிறைகளாக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்

    விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெறுவதற்காக, சிறப்புக்குரிய ஒருவரைப் பலியிட வேண்டியிருந்தது. அதற்காக அர்ச்சுனனின் பிள்ளைகளில் ஒருவனான அரவான் முன்வந்தான். ஆனால் பலியாவதற்கு முன்பாக, திருமணம் செய்துகொள்ள அவன் விரும்பினான். இறக்கப் போகும் ஒருவனுக்குப் பெண் கொடுக்க, யார்தான் முன்வருவார்கள்? அரவானை திருமணம் செய்ய யாரும் தயாராக இல்லை. இதனால் அவனைப் பலியிடும் நாளும் தள்ளிக்கொண்டே போனது. போருக்கான நாளோ நெருங்கிவிட்டது.

    இதையறிந்த கிருஷ்ணன், தானே மோகினி என்னும் பெண் உருவம் எடுத்து அரவானை மணம்புரிந்தார். அதற்கு அடுத்த நாள், அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அகற்றி, வெள்ளைச் சேலை உடுத்தி, விதவைக் கோலம் தரித்தாள். அதன்பின் சுயவடிவம் அடைந்த கிருஷ்ணன், பாரதப் போரினை முன்னின்று நடத்தி பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப்படி அரவானுக்காக பெண் வேடத்தில் வந்த கிருஷ்ணனின் அம்சம்தான் திருநங்கைகள் என்கிறது புராணங்கள்.

    திருநங்கைகள் என்றால், ஆணாகப் பிறந்து பின்னாளில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள். அதாவது, ஆண் உடம்பில் பெண்ணுக்குரிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ‘திரு’ என்றால் ‘ஆண்மகன்’ என்றும், ‘நங்கை’ என்றால் ‘பெண் மகள்’ என்றும் பொருள். இரண்டும் சேர்ந்ததே ‘திருநங்கை’ என்ற வாக்கியம். இவர்கள், தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.

    அன்று கிருஷ்ணன், மோகினியாக உருமாறி அரவானை மணந்ததை நினைவுகூரும் வகையில்தான், திருநங்கைகள் தங்கள் கணவனாக அரவானை ஏற்று சித்ரா பவுர்ணமி நன்னாளில் திருமணம் செய்து கொள்கின்றனர். மறுநாள் அதி காலையிலேயே தாலி அறுத்தல் சடங்கில் ஈடுபட்டு, விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து வழிபடுகிறார்கள்.

    மகாபாரதக் கதையைக் கூறும் பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில், அரவானைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் ‘களப்பலி’ என்னும் பலி சடங்கினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்காக வீரன் ஒருவனை பலி கொடுத்தல் ‘களப்பலி’ எனப்படுகிறது. இந்த பலியைக் கொடுப்பவர்கள், போர்க்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த களப்பலி சடங்கில் அழகும், துணிவும் கொண்ட வீரன் ஒருவன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளிதேவிக்கு பலி கொடுக்க முன் வருவான். அப்படி வந்தவன்தான் அரவான்.

    கிருஷ்ணன் ஆசியுடன் பின்னாளில், கூவாகத்தில் கூத்தாண்டவர் எனும் பெயரில் அரவான் திருகோவில்கொண்டார். இத்தலத்திற்கு நோயுற்ற ஆண்கள், குழந்தைகள், பெண்கள் வந்து வழிபட்டால் உடல் நோய்கள் குணமாகும். திருநங்கைகள் இங்கு வழிபட்டுவர வாழ்வின் அனைத்துவகைப் நற்பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திடுவர். மரணபயம், ஆண்மை குறைபாடுகள் அகல, ஒரு மண்டலம் கூத்தாண்டவரை வழிபட்டு வந்தால் நலம் விளையும். சித்ரா பவுர்ணமி நன்னாளில் இங்கு வந்து வழிபட வாழ்க்கையில் மன அழுத்தத்துடன் வாழ்பவர்களின் துன்பங்கள் விலகி, இன்ப வாழ்வு கிடைக்கும்.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது எனவே திருவிழா நடைபெறவில்லை

    அமைவிடம்

    விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    Next Story
    ×