search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பறியலூர் வீரபத்திரர் திருத்தலம்
    X
    திருப்பறியலூர் வீரபத்திரர் திருத்தலம்

    பகைவர் பயம் நீக்கும் திருப்பறியலூர் வீரபத்திரர் திருத்தலம்

    அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானின் வீரதீரச் செயல்கள் வெளிப்பட்ட தலங்களாக ‘அட்டவீரட்டங்கள்’ எனப்படும் எட்டு தலங்கள் உள்ளன. அவற்றில் ஆறு இடங்களில் சிவபெருமான் நேரடியாக தோன்றி எமன், அந்தகன், சலந்தரன், திரிபுராதிகள், கஜாசுரன், மன்மதன் ஆகியோரை அழித்தும், உயிர்ப்பித்தும் அருள்புரிந்தார். மற்ற இரு இடங்களில் வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி முறையே தட்சன், பிரம்மன் ஆகியோரை தண்டித்ததாகவும், அந்த தலங்களின் புராணங்கள் சொல்கின்றன.

    இந்த அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். ஒரு சாபம் காரணமாக பூலோகத்தில் தட்சனின் மகளாகப் பிறந்திருந்த பார்வதிதேவி, தாட்சாயிணி என்ற பெயருடன் வளர்ந்து வந்தாள். அவள் சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அவரையே மணந்துகொண்டாள். தன் மகள் தனக்குத் தெரியாமல் திருமணம் செய்ததால் அவள் மீதும், ஈசனின் மீதும் தட்சன் கோபம் கொண்டான்.

    ஒரு முறை அவன் நடத்திய யாகத்திற்கு, மகாவிஷ்ணு, பிரம்மன் உள்ளிட்ட பிறதேவர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அழைத்திருந்தான். ஆனால் ஈசனை அழைக்கவில்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தையும் கொடுக்கவில்லை. இதைத் தட்டிக் கேட்கச் சென்ற தாட்சாயிணியையும் அவமதித்து அனுப்பினான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய அம்சமாக வீரபத்திரரை தோற்றுவித்து, தட்சனை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர் தட்சனையும், அவனது யாகத்தையும் அழித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    வீரபத்திரர், பலருக்கும் குலதெய்வமாக இருக்கிறார். பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி அம்மன், வீரபத்திரருக்கு தேவியாக இருந்து அருள்கிறாள். வீரபத்திரருக்கு விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் இந்த வீரபத்திரர் விரதத்தை மேற்கொள்ளலாம். அப்போது சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும் என்கிறார்கள்.

    ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை அஷ்டமியிலும் வீரபத்திரர் விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை ‘வீரபத்திர விரதம்’ என்றும், ‘மகா அஷ்டமி விரதம்’ என்றும் சொல்வார்கள். இந்த விரத நாளில் தும்பை, நந்தியாவர்த்தம் போன்ற வெண்மை நில மலர்களைக் கொண்டு வீரபத்திரரை அர்ச்சித்து, வெண் பட்டு துணியால் அலங்கரித்து, மகா நிவேதனம் செய்து வழிபட்டால் குடும்ப சந்ததிகள் தழைத்தோங்குவர் என்பது நம்பிக்கை.

    சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானது திருப்பறியலூர். இது தற்போது பரசலூர் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் மகா மண்டபத்திற்கு வடக்கில் வீரபத்திரர் சன்னிதி உள்ளது. மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணிமாலை ஏந்தியபடி வீரபத்திரர் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் சகல பயமும் நீங்கி இன்பமான வாழ்வைப் பெறலாம்.

    செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள்கோவில் சாலையில் தென்கிழக்கில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அனுமந்தபுரம் இருக்கிறது. இங்கும் வீரபத்திரருக்கு ஆலயம் உள்ளது. இங்குள்ள வீரபத்திரர் காலையில் குழந்தை முகத்துடனும், உச்சி வேளையில் வாலிபத் தோற்றத்துடனும், மாலையில் வயோதிகராகவும் காட்சி தருவது சிறப்புக்குரியது.

    மேல்மருவத்தூருக்கு தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் பெரும்பேர்கண்டிகை என்ற முருகன் தலம் உள்ளது. இந்த ஊரின் நடுவே வீரபத்திரர் ஆலயம் இருக்கிறது. கருவறையில் வீரபத்திரரும், அவருக்கு வடமேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் பத்ரகாளியும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள சக்கரக் கிணறு தீர்த்தம் மிகவும் விசேஷமானது என்று சொல்கிறார்கள்.
    Next Story
    ×