search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அஷ்ட பைரவர்கள்
    X
    அஷ்ட பைரவர்கள்

    அஷ்ட பைரவர்களும்- அவர்கள் எழுந்தருளியுள்ள கோவில்களும்

    பைரவரின் பிரதானமான எட்டு வடிவங்கள் ‘அஷ்ட பைரவர்கள்’ என்று அழைக்கப்படுகிறது. அவர்களை பற்றியும், அவர்கள் எழுந்தருளியுள்ள கோவில்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவரும் ஒருவர். மகா ஞானியான இவர், ரவுத்ர தோற்றம் கொண்டவர். பைரவருக்கு அனைத்து சிவாலயங்களிலும் தனி சன்னிதியோ, அல்லது திருமேனியோ இருக்கும். ஏனெனில் சிவாலயத்தின் காவல் தெய்வமாகவும் பைரவரே கருதப்படுகிறார். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோவில் மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்வது வழக்கமான ஒன்று.

    அந்தகாசுரன் என்னும் அசுரன், தேவர்களையெல்லாம் துன்புறுத்தி வந்தான். அதோடு சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர்களுக்கும் அவன் தொல்லை கொடுத்தான். தன்னை நம்பியவர்களை துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க, சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். இதனால் தன்னுடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து மகா பைரவரை தோற்றுவித்தார். அந்தகாசுரரை வதம் செய்தவரும், கர்வம் கொண்ட பிரம்மதேவனின் தலையை கொய்தவரும் இவரே. பைரவரின் பிரதானமான எட்டு வடிவங்கள் ‘அஷ்ட பைரவர்கள்’ என்று அழைக்கப்படுகிறது. அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என எட்டு பைரவர்களும் ‘அஷ்ட பைரவர்கள்’ ஆவர்.

    அசிதாங்க பைரவர்

    அஷ்ட பைரவர்களில், முதன்மையானவராக கருதப்படுகிறார். பொதுவாக பைரவருக்கு வாகனம் நாய். ஆனால் அசிதாங்க பைரவருக்கு, அன்னப் பறவை வாகனமாக உள்ளது. இவரின் அதி தேவதை, சப்த கன்னியரில் ஒருவரான பிராம்ஹி ஆவார். நவக்கிரகங்களில் குருவின் தோஷம் விலக, இந்தப் பைரவரை தரிசிக்கலாம். காசி மாநகரில் உள்ள விருத்தகாலர் கோவிலில் இந்த பைவரர் அருள்பாலிக்கிறார்.

    ருரு பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்திகளில் இரண்டாவது தோற்றம் இவருடையது. சிவபெருமானைப் போலவே, ரிஷபத்தை வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் சுக்ரனின் தோஷம் இருப்பவர்கள், இந்த ருரு பைரவரை தரிசனம் செய்யலாம். இவருடைய அதிதேவதையாக சப்த கன்னியரில் ஒருவரான மகேஷ்வரி விளங்குகிறார். காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் இந்த பைரவர் அருள்புரிகிறார்.

    சண்ட பைரவர்

    அஷ்ட பைரவர்களில் மூன்றாவதாக வடிவம் கொண்டவர், சண்ட பைரவர். இவர் மயில் வாகனத்தை வைத்திருக்கிறார். இவரது சக்தி வடிவமாக சப்த கன்னியர்களில் ஒருவரான கவுமாரி விளங்குகிறாள். நவக்கிரகங்களில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்யலாம். காசி மாநகரில் உள்ள துர்க்கை கோவிலில் இந்த பைரவர் அருளாட்சி செய்கிறார்.

    குரோதன பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்திகளில் நான்காவதானவர், குரோதன பைரவர். இவருக்கு கருடன் வாகனமாக இருக்கிறது. இவரது சக்தி வடிவமாக சப்த கன்னியரில் ஒருவரான வைஷ்ணவி விளங்குகிறாள். நவக்கிரகத்தில் சனிதோஷம் இருப்பவர்கள், இந்த பைரவரை வழிபட்டால் நிவர்த்தி பெறலாம். காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் இந்த பைரவரை தரிசிக்கலாம்.

    உன்மத்த பைரவர்

    அஷ்ட பைரவர்களில் ஐந்தாவது தோற்றம் கொண்டவர், இவர். குதிரையை வாகனமாகக் கொண்டவர். இவரது சக்தி வடிவமாக சப்த கன்னியரில் ஒருவரான வராகி விளங்குகிறாள். நவக்கிரகங்களில் புதன் தோஷம் இருப்பவர்கள், இந்த பைரவரை தரிசனம் செய்வது நல்லது. காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் இந்த உன்மத்த பைரவர் அருள்பாலிக்கிறார்.

    கபால பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில், ஆறாவதாக இருப்பவர் கபால பைரவர். இவர் யானையை வாகனமாக வைத்திருப்பவர். இவரது சக்தி வடிவமாக சப்த கன்னியரில் ஒருவரான இந்திராணி விளங்குகிறாள். நவக்கிரகங்களில் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த பைரவரை வணங்கலாம். காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவர் அருள்கிறார்.

    பீஷண பைரவர்

    அஷ்ட பைரவர்களில் ஏழாவது தோற்றம் கொண்டவர், பீஷண பைரவர். இவருக்கு சிங்கம் வாகனமாக இருக்கிறது. இவரது சக்தி வடிவமாக சப்த கன்னியரில் ஒருவரான சாமுண்டி விளங்குகிறார். நவக்கிரகங்களில் கேது கிரக தோஷம் இருப்பவர்கள், இந்த பைரவரை வழிபட்டு வரலாம். காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.

    சம்ஹார பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில், எட்டாவதாக இருப்பவர் சம்ஹார பைரவர். இவர் நாய் வாகனத்தைக் கொண்டவர். இவரது சக்தி வடிவமாக சண்டிகை தேவி விளங்குகிறாள். நவக்கிரகங்களில் ராகு தோஷம் உள்ளவர்கள் இந்த பைரவரை தரிசிக்கலாம். காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் இந்த பைரவர் அருள்பாலிக்கிறார்.
    Next Story
    ×