என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோடி நன்மை தரும் கோபிஸ்வரர் கோவில்
    X

    கோடி நன்மை தரும் கோபிஸ்வரர் கோவில்

    பல்வேறு இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், உத்திரகாண்ட் மாவட்டத்தில் கோபிஸ்வரர் என நாமம் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருளாசி புரிந்து கொண்டு இருக்கிறார்.
    ‘தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்ட வருக்கும் இறைவா போற்றி’ என பக்தர்களால் பாடி, துதித்து பரவசமடையும் பரமேஸ்வரன், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். பல்வேறு இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், உத்திரகாண்ட் மாவட்டத்தில் கோபிஸ்வரர் என நாமம் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருளாசி புரிந்து கொண்டு இருக்கிறார்.

    பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் வழியில் கோபிநாத் கோவில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மிக உயரமான கோவில்களில் கேதார்நாத்துக்கு அடுத்த இடத்தில் கோபிஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலின் கட்டிடக் கலை மிகவும் பிரசித்திப் பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அதன் மூலம் கி.பி. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டு கோவிலை கத்திரிய அரசர்கள் கட்டியதாக தெரிய வருகிறது. சிவபெருமான், கோபிய பெண்ணின் உருவத்தில் கிருஷ்ணருடன் நடனமாடினார் என்று சொல்லப்படுகிறது. அதனால் இத்தல இறைவனின் பெயர் கோபிநாத் என்று பெயரிடப்பட்டது.

    கோவிலின் பிரகாரத்தில் 5 அடி உயரத்திற்கு, 20 சென்டி மீட்டர் அகலத்திற்கு ஒரு சூலாயுதம் இருக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒருமுறை சிவபெருமான் தியானத்தில் இருந்தார். மன்மதன் அங்கு சென்று சிவபெருமானின் தியானத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த சிவபெருமான் சூலாயுதத்தை எடுத்து வீசினார். அது இந்த இடத்தில் ஆழமாக பதிந்து விட்டதாக நம்பப்படுகிறது. இந்த சூலாயுதம் இன்றும் பனியிலும் வெயிலும் பாதிக்காமல் அப்படியே இருக்கிறது. காலத்தால் அழியாத இந்த திரிசூலம் பக்தர்களின் தீவினைகளையும், மனகஷ்டத்தை போக்கக்கூடியது என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    கைகளால் பிடித்து ஆட்டும் போது ஆடாத திரிசூலம், சிவனை நினைத்து சிவ நாமத்தை சொல்லி ஒரு சுண்டு விரல் கொண்டு தட்டினாலே அது லேசாக அசைவதை உணர முடியும். இத்தல இறைவனை நினைத்தால் ஒருவரின் மன கஷ்டங்கள் போவதுடன், நினைத்தக் காரியங்கள் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து யாத்ரீகர்கள் வந்து சிவனை வழிபட்டு தங்கள் மன கஷ்டங்களை போக்கிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் உருவானதற்கு மற்றுமொரு கதையும் சொல்லப்படுகிறது. இப்பகுதியை ஆண்ட ராஜசேகர் என்ற மன்னன், ஒரு பசு இந்த இடத்திற்கு தினமும் வந்து தானாகவே பாலை சுரப்பதை அறிந்தான். இதையடுத்து மன்னன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை அறிந்து வியப்படைந்தான். பின்னர் அங்கு கோவிலை அமைத்தான்.

    இந்த ஆலயத்தின் அழகிய கோபுரத்தில் 24 கதவுகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் முன்பாக சிறிய நந்தி ஒன்று காண்போரை பரவசம் அடையச் செய்கிறது. பிரகாரத்தில் கணேசர் சன்னிதி, பார்வதி, பைரவர், அனுசியா, நவதுர்க்கா, அனுமன், பரசுராமன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வெயில் காலத்திலும், வசந்த காலத்திலும் செல்வது நல்லது. குளிர்காலத்தில் அதிக குளிராகவும், பனி உறைந்தும் இருக்கும்.

    ரிஷிகேஷில் இருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம். கோவில் வரை செல்ல பஸ், கார் வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து செல்பவர்கள் ரிஷிகேஷ் வரை ரெயிலில் செல்லலாம். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை சென்றடையலாம்.
    Next Story
    ×